மேலும் செய்திகள்
ரயில்கள் பிச்சையெடுப்பு சிறுவர்கள் அதிகரிப்பு
5 minutes ago
பஸ்சில் இருந்த டிக்கெட் இயந்திரம் திருட்டு
28-Dec-2025
பெண்ணை சீண்டிய வாலிபர் கைது
28-Dec-2025
ரா கத்தின் ஆழத்தையும், பக்தியையும் தன் தனித்துவ குரலால், மியூசிக் அகாடமியில் நடந்த இசை கச்சேரியில் மகிழ்ச்சி பொங்க வெளிப்படுத்தினார், வாய்ப்பாட்டு கலைஞர் வசுதா ரவி. கச்சேரியின் துவக்கமாக, கரூர் தேவுடு அய்யர் இயற்றிய ஸ்ரீ ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'சாமி நின்னே கோரி' என்ற வர்ணத்தை, கணீரென்ற குரலில் பாடி சபையை தன் வசப்படுத்தினார். தொடர்ந்து, பத்ராசல ராமதாசின் படைப்பான, 'என்னகானு ராம பஜன' கிருதியை, பந்துவராளி - காமவர்த்தினி - ராகம், ரூபக தாளத்தில் மிகவும் உருக்கமாகப் பாடினார். அவர் மனதிலும், சபையினரின் மனதிலும் பொங்கிய பக்தி, அத்தனை முகங்களிலும் காண முடிந்தது. அடுத்ததாக, தியாகராஜரின் தேவகாந்தாரி ராக கிருதியான 'வின ராதா' பாடலை, தேசாதி தாளத்தில் நிதானமாக வழங்கினார். இப்படி பாடுவதற்கு, இசைபற்றி தெளிவான புரிதல் தேவை. அது, கச்சிதமாக அவரிடம் காண முடிந்தது. இதற்கு சிந்து சுசேரன், தன் வயலினில் ராகத்தின் நுணுக்கங்களை மென்மையாக வெளிப்படுத்தி, அந்த கிருதியை மெருகூட்டினார். கச்சேரியின் கனமான பகுதியாக, சியாம சாஸ்திரிகளின் புகழ்பெற்ற பைரவி ராக கிருதியான, 'ஸரி எவரம்மா' பாடலை, கண்ட ஜாதி ஜம்ப தாளத்தில் வசுதா ரவி பாடினார். ராக ஆலாபனையோடு துவங்கி, சங்கதிகளையும் ஸ்வரங்களையும், கோர்வையாகப் பாடி அசரடித்தார். கச்சேரியின் சிகரப்பகுதியாக, வரமு ராகத்தில் 'துணை புரிந்தருள் தருண மாதவ உலக நாயகா' என்ற பல்லவி வரிகளை எடுத்துக்கொண்டு, விரிவான ஆலாபனை, நிரவல் மற்றும் கற்பனை ஸ்வரங்களுடன் சரமாரியாக வழங்கினார். வரமு ராகத்தின் இனிமை மாறாமல் ஸ்வரக் கணக்குகளை பொழிந்தவிதம் அபாரம். தனி ஆவர்த்தன பகுதியை திருச்சேறை கவுசிக் ராஜகோபால் மிருதங்கத்திலும் கணபதி கஞ்சிராவிலும், மிக லாவகமாக இசைத்து, சபையினரின் கைதட்டலை பெற்றனர். இறுதியாக, பாபநாசம் சிவன் இயற்றிய செஞ்சுருட்டி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'வள்ளலைப் பாடும்' என்ற கிருதியை பாடி, தெய்வீக தன்மையை படரவிட்டு கச்சேரியை நிறைவு செய்தார். - ரா.பிரியங்கா
5 minutes ago
28-Dec-2025
28-Dec-2025