பா.ஜ., தலைவர் நாகேந்திரன் சொல்வது பொய்: பன்னீர்
சென்னை 'என்னிடம் சொல்லியிருந்தால் நான் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்' என தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் சொன்னதில் உண்மையில்லை என்று அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்ததில் எள்ளளவும் உண்மை இல்லை. அவரை மொபைல் போனில் தொடர்புகொள்ள, ஆறு முறை முயற்சித்தேன். குறுஞ்செய்தியும் அனுப்பினேன். அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. அதற்கான அதாரம் என்னிடம் உள்ளது. வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் ஆலோசித்து, பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அது பத்திரிக்கைகளுக்கும் அனுப்பப்பட்டது. நான் பிரதமரை சந்திக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் விரும்பியிருந்தால், என்னுடைய அழைப்பு, குறுஞ்செய்தி மற்றும் நான் எழுதிய கடிதம் வெளியானதை அடிப்படையாக வைத்து, பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருக்கலாம். இதிலிருந்து, நான் பிரதமரை சந்திப்பதில் அவருக்கு விருப்பமில்லை என்பது தெளிவாகிறது. நயினார் நாகேந்திரன் பேசுவது உண்மைக்கு புறம்பானது. பா.ஜ., மாநில தலைவராக உள்ள அவர் இனியாவது உண்மை பேச வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.