உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தகுதி உண்டு எனச் சொல்லிவிட்டு தேர்வாகவில்லை என்றால் எப்படி?

தகுதி உண்டு எனச் சொல்லிவிட்டு தேர்வாகவில்லை என்றால் எப்படி?

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சிக்குப் பின், பி.எட்., முடித்தவரை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுப் பட்டியலில் சேர்க்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, கடந்த ஆண்டு அக்டோபரில், ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இந்தப் பணிக்கு, வி.ராஜேஸ்வரி என்பவர் விண்ணப்பித்தார். கடந்த மே மாதம், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டார். தேர்வு பட்டியலில், ராஜேஸ்வரியின் பெயர் இடம் பெறவில்லை. குறைந்தபட்ச கல்வி தகுதியை பெற்றிருக்கவில்லை என, காரணம் கூறப்பட்டது.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ராஜேஸ்வரி வழக்கு தொடர்ந்தார். தேர்வுப் பட்டியலில் தன்னை சேர்த்து, பட்டதாரி ஆசிரியர் பணியில் நியமிக்கவும் கோரினார். மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பின்படி, பி.எட்., இறுதியாண்டு தேர்வு எழுதுபவர்களும், ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தகுதி உள்ளது. 2017ல், ஆசிரியர் தகுதி தேர்வை ராஜேஸ்வரி முடித்துள்ளார். பி.எட்., படிப்பில், தேர்ச்சி பெறாமல் இருந்த ஒரு பாடத்தை எழுதி, 2018ல் முடித்துள்ளார். அதனால், தகுதி தேர்வு தேர்ச்சிக்குப் பின், பி.எட்., முடித்துள்ளார் என்பதால், பணிக்கு பரிசீலிக்க முடியாது என்ற நிலையை, வாரியம் எடுத்துள்ளது. தற்போது, சான்றிதழ் சரிபார்ப்பின் போது, அனைத்து சான்றிதழ்களையும் அளித்துள்ளார். குறைந்தபட்ச கல்வி தகுதியை பூர்த்தி செய்துள்ளார். அதாவது, பி.எட்., படிப்பையும், ஆசிரியர் தகுதி தேர்வையும் முடித்துள்ளார். தகுதி தேர்வுக்குப் பின் பி.எட்., முடித்ததால், தேர்வில் பங்கேற்கும் உரிமை, பறிபோய் விடாது. எனவே, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுப் பட்டியலில், மனுதாரரின் பெயரை சேர்க்க வேண்டும். சட்டப்படி மேல் நடவடிக்கையை தொடர வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
அக் 17, 2024 18:23

இப்படி ஒவ்வொருக்கும் நீதிமன்றத்தையே அணுகி தீர்ப்பு வாங்க எத்தனை பேரால் முடியும்? அவ்விதம் வென்று வந்தவர்களை எந்த விதத்தில் பழி வாங்கலாம் என்றுதான் பார்ப்பார்கள் நிம்மதியாக வேலை செய்யவே விட மாட்டார்கள்


முக்கிய வீடியோ