சென்னை,'சட்டசபையில் அறிவிக்கப்பட்ட, 'வடசென்னை வளர்ச்சி திட்டம்' என்பது பழைய மெட்டில் பாடப்படும் புதுப்பல்லவி. இதுவரை எந்த திட்டமும் செயல்படுத்தியதற்கான தடயம்கூட இல்லை' என, பா.ஜ., மாநில செய்தித் தொடர்பாளர் சுப்ரமணிய பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 'வடசென்னை வளர்ச்சி திட்டம்' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட உள்ள 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களின் விபரங்களை, சட்டசபையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கடந்த நிதிநிலை அறிக்கையிலும், இதே 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. வடசென்னை மக்களின் ஓட்டுகளுக்காக, பழைய பல்லவியை புதுமெட்டில் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் மீண்டும் பாடத் துவங்கி உள்ளன. ஆனால், எந்த திட்டங்களும் செயல்படுத்தப்பட்டதற்கான தடயங்கள் இல்லை.கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தை ஆண்ட அரசுகள், வடசென்னை பகுதிகளை புறக்கணித்தே வந்துள்ளன. தென்சென்னையையும், வடசென்னையையும் ஒருமுறை சுற்றிப் பார்த்தாலே, வடசென்னையை எந்த அளவுக்கு 'மாற்றாந்தாய்' மனப்பான்மையுடன் அரசு நடத்தியிருக்கிறது என்பது தெரியவரும்.சரியான சாலை வசதிகள், சுகாதாரமான குடிநீர், கழிவுநீர் கால்வாய் வசதிகள் இல்லை. அதிக காற்று மாசு போன்றவை தான் வடசென்னையின் அடையாளங்கள். வடசென்னை எப்படி வஞ்சிக்கப்படுகிறது என்பதை, 'என் மண் என் மக்கள்' யாத்திரையில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டி பேசினார்.வியாசர்பாடி, கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது அரை நுாற்றாண்டுக்கும் மேலாக வடசென்னை மக்களின் கோரிக்கை. இப்போது தான் பணிகள் துவக்கப்பட்டுள்ன; எப்போது முடியும் எனத் தெரியாது.'மக்களின் அடிப்படை வசதிகள் தொடர்பான திட்டங்களை, மாநகராட்சி, குடிநீர் வாரியம், நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டு வரும் நிலையில், அத்துறைகளுக்கு, 1,000 கோடி ரூபாய் எவ்வாறு பகிர்ந்து அளிக்கப்படும்' என்பது குறித்து முடிவெடுத்து, மக்களுக்கு அறிவிக்க வேண்டும்வடசென்னை பகுதி முன்னேறி இருக்கிறது என, தி.மு.க., அரசு சொல்லுமானால், கொளத்துார் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின், தன் வீட்டை சித்தரஞ்சன் சாலையில் இருந்து கொளத்துார் தொகுதிக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.கொளத்துாரில் இருந்து கோட்டைக்கு வந்து பாருங்கள். அப்போது தான் வடசென்னை மக்களின் வழியெங்கும் இருக்கும் வலி புரியும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.