ஆவடி:ஆவடி அடுத்து அண்ணனுார், ஸ்ரீசக்தி நகரைச் சேர்ந்தவர் மாதவன், 65. இவர், சென்னை துறைமுகத்தில் கப்பல் மெக்கானிக்காக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வீட்டின் மாடியில் 'வி.எஸ்.எம் ராயல் மஹால்' என்ற பெயரில், சிறிய 'பார்ட்டி ஹால்' நடத்தி வந்தார்.இவரது, இரண்டாவது மனைவி சியாமளா, 45. தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ப்ரோ மோனிகா, 19. ரஷ்யாவில் மருத்துவம் படிக்கிறார். இளைய மகள் தீக்ஷிதா, 12; ஏழாம் வகுப்பு மாணவி. இவர்களுடன் மாமியார் விஜிமோனி, 75, தங்கியுள்ளார்.நேற்று முன்தினம் இரவு 7:30 மணி அளவில், 'மங்க்கி குல்லா' அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், இவரது வீட்டில் நுழைந்து, மாதவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.பின், மறைத்து வைத்திருந்த கத்தியால், மாதவனை சரமாரியாக வெட்டினார். இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தடுக்க வந்த மனைவி சியாமளா, மாமியார் விஜிமோனி மற்றும் மகள் தீக்ஷிதா ஆகியோரை வெட்டி, மர்ம நபர் பின்பக்கமாக தப்பிச் சென்றுள்ளார்.திருமுல்லைவாயில் போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.முதற்கட்ட விசாரணையில், கொலையாளிக்கு 35 வயது இருக்கும் எனக் கூறப்படுகிறது. மாதவன் வீடு, மண்டபம் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் 'சிசிடிவி' கண்காணப்பு கேமராக்கள் பொருத்தப்படாத காரணத்தால், குற்றவாளியை அடையாளம் காண்பதில் சவால் ஏற்பட்டுள்ளது.ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின்படி, ஐந்து தனிப்படை போலீசார் கொலையாளியை தேடி வருகின்றனர்.