கும்மிருட்டில் பத்மாவதியார் சாலை மாநகராட்சி வெளிச்சம் கொடுக்குமா?
சென்னை: கும்மிருட்டில் மூழ்கி கிடக்கும் கோபாலபுரம், பத்மாவதியால் சாலையால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட கோபாலபுரத்தில், பத்மாவதியார் சாலை உள்ளது. இது, பீட்டர்ஸ் சாலை - அவ்வை சண்முகம் சாலையை இணைக்கும் பிரதான சாலை. இங்கு, மாநராட்சி சார்பில், 20 தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், நான்கு தெரு விளக்குகள் மரக்கிளைகளால் மறைந்து கிடக்கின்றன. மேலும், சரிவர எரியாததால், இரவு வேளையில் அப்பகுதி கும்மிருட்டாக மாறிவிடுகிறது. இதனால் நடந்து செல்லவே மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். பாதசாரிகள் வசதிக்காக அகலமான நடைபாதை அமைத்த மாநகராட்சி தெருவிளக்கு பராமரிப்பில் மெத்தனமாக உள்ளதால், இரவு நேரங்களில் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களிலிருந்து பெட்ரோல் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மேலும், வழிப்பறி அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆயவு செய்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.