மக்களை கவரும் வகையில் வடிவமைப்பு மாற்றப்படுமா? கலையம்சம் இல்லாத சென்ட்ரல் வணிக வளாகம்
சென்னை: 'சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில், 364 கோடி ரூபாயில் அமையும் பிரமாண்ட வணிக வளாக கட்டடத்தின் வடிவமைப்பு, பார்த்து ரசிக்கும்படி கலையம்சம் கொண்டதாக இல்லை. கட்டட கலை சார்ந்த புதிய தொழில்பங்கள் வந்தும், மக்களை கவரும் வகையில் இல்லாதது ஏமாற்றம் அறிக்கிறது' என, கட்டுமான துறை வல்லுனர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.சென்னையின் அடையாளமாக்கும் அளவிற்கு, வடிவமைப்பிலும் மாற்றங்களை செய்ய வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.சென்னையில் மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில், வர்த்தக நடவடிக்கைகள் அடிப்படையில், சில கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இதில், சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில், போக்குவரத்து முனையம் ஏற்படுத்தும் நோக்கில், மத்திய சதுக்கம் கட்டப்பட்டு வருகிறது. சென்ட்ரல் ரயில் நிலையம், புறநகர் மின்சார ரயில் முனையம், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, பூங்கா நகர் ரயில் நிலையம், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் இந்த சதுக்கம் அமைகிறது.இதற்காக நிலம் கையகப்படுத்தும்போது, கூடுதலாக பூந்தமல்லி நெடுஞ்சாலையை ஒட்டி பெறப்பட்ட நிலத்தில், மூன்று அடுக்குமாடி கட்டடங்கள் கட்ட, மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்தது.இதன்படி, 365 கோடி ரூபாய் செலவில், 27 மாடிகள் உடைய பிரமாண்ட வணிக வளாகம் கட்டுவதற்கு, முதல்வர் ஸ்டாலின், சில நாட்கள் முன் அடிக்கல் நாட்டினார். அப்போது, புதிய கட்டடம் தொடர்பான மாதிரி வடிவங்கள் வெளியாகின. இந்த வரைபடங்களில், இப்பகுதிக்கான பாரம்பரிய சிறப்பை பிரதிபலிக்கும் கூறுகள் எதுவும் இதில் இல்லாதது, கட்டட வடிவமைப்பு வல்லுநர்கள் உட்பட, பல்வேறு தரப்பினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏமாற்றம் அளிக்கிறது
இதுகுறித்து, கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது: சென்டரலில், சென்ட்ரல் ரயில் நிலையம், விக்டோரியா அரங்கம், ரிப்பன் கட்டடம் ஆகிய பாரம்பரிய கட்டடங்கள் அமைந்துள்ளன. இதற்கு எதிரில் சென்னையில், புதிய அடையாளமாக அமையும் கட்டடத்தின் வடிவமைப்பு தொடர்பான எதிர்பார்ப்புகள் இயல்பாகவே எழும். இதுபோன்ற கட்டடங்கள் கட்டும்போது, மக்களை கவரும் வகையில் அமைய வேண்டும். அருகில் உள்ள பாரம்பரிய கட்டடங்களின் வடிவமைப்பை பிரதிபலிக்கும் வகையிலோ, அதற்கு இணையான புதிய வடிவமைப்பை உருவாக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான பகுதிகளை கண்ணாடி மூடியிருக்கும் வகையில் வடிமைப்பு உள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. ஏற்கனவே, ஓமந்துாரார் தோட்டத்தில் புதிய தலைமை செயலகம் கட்டும்போதும் இதே தவறுதான் நடந்தது. இன்னும் கட்டுமான பணிகள் துவங்காத நிலையில், வடிவமைப்பு சார்ந்த விஷயங்களில், பாரம்பரிய கட்டடங்களின் சிறப்புகளை கருத்தில் வைத்து, அதிகாரிகள் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நவீன தொழில்நுட்பம் எங்கே? போக்குவரத்து முனையத்தின் ஒரு பகுதியாக, சென்ட்ரல் வணிக வளாக கட்டடம் அமைகிறது. இதற்கான வடிவமைப்பு பார்த்ததும் மனதில் பதியும் வகையில் இல்லை; எவ்வித பாரம்பரிய கட்டடக்கலை கூறுகளும் காணப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. கார்ப்பரேட் அலுவலக கட்டடம் போல் உள்ளது. இப்பகுதியில் உள்ள பாரம்பரிய கட்டடங்களை பிரதிபலிப்பதாககூறி, இதன் மேல் பகுதியில் சில வளைவுகள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளன. இப்பகுதியில், அரசு பொது மருத்துவமனை, சென்னை மருத்துவ கல்லுாரி புதிய கட்டடங்கள் போன்று, இதிலும் கட்டடகலை கூறுகள் இல்லாத வடிவமைப்பே காணப்படுகிறது. கட்டட கலையில் நவீன தொழில்நுட்பங்கள் வந்து விட்டன. இருந்தும், இந்த வணிக வளாகம் சரியாக திட்டமிடப்படவில்லை. சென்னையின் அடையாளம் என்று கூறும் அதே நேரம், அதற்கேற்ப வடிமைப்பிலும் மாற்றம் வேண்டும்.- வி.ஸ்ரீராம்,பொறியாளர், வரலாற்று ஆர்வலர்.