கொண்டித்தோப்பு பகுதியில் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா? திறந்து கிடக்கும் மூடிகளாலும் உயிர்பலி அபாயம்
கொண்டித்தோப்பு: கொண்டித்தோப்பு பகுதியில் பழமையான கழிவுநீர் குழாய்களை மாற்றி அமைத்து, அப்பகுதி மக்கள் தினசரி எதிர்கொள்ளும் கழிவுநீர் பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது. ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட கொண்டித்தோப்பு, 53வது வார்டு படவட்டம்மன் கோவில் தெருவில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறி தெருக்களில் தேங்கி நிற்கும் அவலம், பல ஆண்டுகளாக தொடர்கதையாக உள்ளது. ஒவ்வொரு முறையும் புகார் அளிக்கும்போது, மாநகராட்சி ஊழியர்கள் வந்து அடைப்பை அகற்றி செல்கின்றனர். திரும்பவும் அடைப்பு ஏற்படுகிறது. தினசரி கழிவுநீர் கால்வாய் மூடிகளை திறக்க வேண்டும் என்பதால், ஊழியர்களும் மூடாமல் சென்று விடுகின்றனர். இதனால், பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கழிவுகளும் அதில் விழுந்து மீண்டும் அடைப்பு ஏற்படக் காரணமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், இரவு வேளைகளில் குழந்தைகள் தவறி விழும் அபாயமும் உள்ளது. மேலும், கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, பல ஆண்டுகளாக தொடரும் கழிவுநீர் அடைப்பு பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காண வேண்டும் என, பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
10 முறை ஆய்வு நடத்தியும் நடவடிக்கை இல்லை
கழிவுநீர் பிரச்னை குறித்து கொண்டித்தோப்பு பகுதிமக்கள் கூறியதாவது: கழிவுநீரில் அடைப்பு ஏற்படுவதால், கழிவுநீர் வெளியேறி, அருகில் உள்ள தெருக்களிலும் தேங்கி நிற்கின்றன. அடிக்கடி மர்ம காய்ச்சலால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு முறையும் மாநகராட்சி மற்றும் கவுன்சிலரிடம் புகார் அளித்தும், நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'கொண்டித்தோப்பு பகுதியில் உள்ள புதை சாக்கடை குழாய்கள், ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டவை. அந்த குழாய்கள் பழமையானதால், அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுகிறது. தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப குழாயின் அளவை அதிகரித்து, மாற்றி அமைக்க வேண்டியது அவசியம்' என்றனர். உடனடியாக பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர். அதே நேரம், புதிய குழாய் புதைப்பதற்காக, இதுவரை 10 முறை அளவு எடுத்து சென்றுள்ளனர். ஆனால் தற்போது வரை, தீர்வு காண எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.