உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வில்லிவாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம் 108 குடும்பங்கள் மறுகுடியமர்வு

வில்லிவாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம் 108 குடும்பங்கள் மறுகுடியமர்வு

வில்லிவாக்கம், அண்ணா நகர் மண்டலம், 94வது வார்டில், வில்லிவாக்கம் ஏரிக்கு அருகில் அன்னை சத்யா நகர் பகுதி உள்ளது. குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான இந்த இடத்தில், 300க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்து, பல ஆண்டுகளாக வீடுகளை கட்டி குடியிருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டு பருவமழையின் போது, வில்லிவாக்கம் ஏரியின் அருகில் உள்ள அன்னை சத்யா நகர் பகுதி முதலில் தத்தளிக்கும். அதன் பின், சிட்கோ நகர் உள்ளிட்ட பகுதியில் வெள்ள நீர் புகும்.இந்நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், குடிநீர் வாரியத்திற்குச் சொந்தமான ஏரி இடத்தில், பசுமை பூங்கா அமைக்க, மாநகராட்சி திட்டமிட்டது. அதற்கான இடத்தை கையகப்படுத்தும் போது, அன்னை சத்யா நகரில் சில பகுதிகள் ஏரியின் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரிந்தது.இதையடுத்து, மாநகராட்சி அப்பகுதியில் கணக்கெடுப்பு பணிகளை நடத்தி, குடியிருப்பு மக்களுக்கு நோட்டீஸ் வழங்கியது. கடந்த மூன்று ஆண்டுகளாக, படிப்படியாக ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு வந்தன.இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், வில்லிவாக்கம் பசுமை பூங்கா பணிகளை விரைந்து முடிக்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். இதையடுத்து, மீண்டும் அன்னை சத்யா நகர் பகுதியில், ஆக்கிரமிப்பு கணக்கெடுப்பு பணிகள் துவங்கின. அதில், 300க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, மூன்று ஆண்டுகளாக படிப்படியாக வீடுகள் அகற்றப்படுகின்றன. இதில், கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட 114 வீடுகளை அகற்ற முயன்ற போது, அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இரு நாட்களுக்கு முன், அண்ணா நகர் மண்டல அலுவலகத்திலும் முறையிட்டனர்.இதையடுத்து நேற்று, மாநகராட்சி அதிகாரிகள், அப்பகுதியில் குடியிருந்த 114 குடும்பங்களில், 108 குடும்பங்களுக்கு, மூலகொத்தளம் பகுதியில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், வீடுகள் ஒதுக்கீடு செய்தனர்.பின், அவர்களுக்கு மூன்று நாட்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து, நேற்று அவர்களை மறு குடியமர்வு செய்தனர்.இதுகுறித்து, 94வது வார்டு கவுன்சிலரும், அண்ணா நகர் மண்டல குழு தலைவருமான கூ.பி.ஜெயின் கூறுகையில்,''கடந்த மூன்று ஆண்டுகளாக, 80 குடும்பங்கள் கே.பி., பார்க், 72 ஐ.சி.எப்., அத்திப்பட்டு பகுதி என, இதுவரை 152 குடும்பங்கள், மூன்று கட்டங்களாக மறு குடியமர்வு செய்யப்பட்டு உள்ளனர்.நேற்று ஒரே நாளில், 108 குடும்பங்களுக்கு, மூலகொத்தளத்தில் வீடு ஒதுக்கீடு செய்து, மறு குடியமர்வு செய்யப்பட்டனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை