ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள விளையாட்டு மைதானங்கள் கண்ணகி நகரில் இளைஞர்கள் பரிதவிப்பு
கண்ணகி நகர்:கண்ணகி நகர், எழில் நகர், சுனாமி நகர் ஆகிய நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில், 23,704 வீடுகள் உள்ளன.இதில், 195வது வார்டுக்கு உட்பட்ட எழில் நகர், சுனாமி நகரில், 6,048 வீடுகள் உள்ளன. 196வது வார்டுக்கு உட்பட்ட கண்ணகி நகரில், 15,656 வீடுகள் உள்ளன.ஆனால், எழில் நகர், சுனாமி நகரில் 2.70 ஏக்கரில், மூன்று இடங்களில், கபடி, கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டு மைதானங்கள், சிறுவர்கள் விளையாட்டு பயிற்சி உபகரணங்கள் உள்ளன.ஆனால், அதிக மக்கள் தொகை கொண்ட கண்ணகி நகரில், விளையாட்டு மைதானங்கள் அமைக்கவில்லை. சிறிய மைதானங்களும் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளன.இதனால், அங்குள்ள விளையாட்டில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள், வெளி இடங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது.பத்து ஆண்டுகளுக்கு மேலாக, கபடி, கைப்பந்து விளையாடிய மைதானத்தில், அங்கன்வாடி மையம் அமைக்க முயற்சி நடந்தது.இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:கண்ணகி நகரில் பல குடும்பங்களில், முதல் தலைமுறை பட்டதாரிகள் உருவாகி உள்ளனர். அவர்கள், போட்டி தேர்வு, விளையாட்டு போட்டிகள் என, அடுத்த கட்டத்திற்கு செல்கின்றனர்.விளையாட போதிய மைதானம் இல்லாததால், அவர்கள் வாழ்க்கை தவறான திசைக்கு செல்ல வாய்ப்புள்ளது.சிலர் தங்கள் சுயநலத்திற்காக, இளைஞர்களை விளையாட அனுமதிக்காமல், அவர்களின் வாழ்க்கையை திசை திருப்ப முயல்கின்றனர்.விளையாடும் மைதானத்தில் கட்டடங்கள் அமைக்காமல், ஆக்கிரமிப்பில் உள்ள வேறு இடங்களை மீட்டு, அதில் கட்டுமானம் அமைக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இளைஞர்கள் கூறியதாவது:கண்ணகி நகரில் கிரிக்கெட் விளையாட இடமில்லை. கபடி, கால்பந்து விளையாடும் இடத்தில், சிலர் இடையூறு செய்கின்றனர். விளையாட தேவையான இடம் ஒதுக்க, வாரியம், மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.அதிகாரிகளிடம் கேட்டபோது, ''கண்ணகி நகரில் கபடி, கைப்பந்து, கூடைப்பந்து விளையாடும் மைதானம் உள்ளது. அதை சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அரசியல் தலையீடு காரணமாக, ஆக்கிரமிப்பு இடங்களை மீட்க முடியவில்லை,'' என்றனர்.