உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ரவுடியை கொன்ற வாலிபர் சுட்டுப்பிடிப்பு

 ரவுடியை கொன்ற வாலிபர் சுட்டுப்பிடிப்பு

சென்னை: மந்தைவெளியில் கார் ஓட்டுநராக இருந்த ரவுடியை கொலை செய்து, இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே பதுங்கியிருந்த குற்றவாளியை, போலீசார் நேற்று சுட்டு பிடித்தனர். மயிலாப்பூர், விசாலாட்சி தோட்டம் சுப்புராயன் தெருவில் உள்ள, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு குடியிருப்பில் வசித்தவர் மவுலி, 23. 'சி' பிரிவு ரவுடியான இவர் மீது, அபிராமபுரம் காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், கார் ஓட்டுநராகவும் பணியாற்றி வந்தார். கடந்த, 20ம் தேதி காலை 11:00 மணிக்கு இருசக்கர வாகனத்தில், ரேஷன் கடைக்கு சென்றபோது, மந்தைவெளி ரயில் நிலையம் அருகே, ஆறு பேர் கும்பல், அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டி தப்பிச்சென்றது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ரவுடியை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, இரு தனிப்படைகள் அமைத்து, அபிராமபுரம் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இது தொடர்பான விசாரணையில், 11ம் தேதி மவுலி, அவரது நண்பர்களான மயிலாப்பூரைச் சேர்ந்த ரவுடி கவுதம், விஜயகுமார், நிரஞ்சன், சபரி, மணி, புருஷோத்தம்மன் உள்ளிட்டோருடன் கஞ்சா புகைத்துள்ளார். அப்போது மவுலிக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் கோபமாக இருந்த அவர்கள், திட்டம் தீட்டி மவுலியை கொலை செய்தது தெரிய வந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கவுதம், நிரஞ்சன் ஆகியோரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், ரவுடி விஜயகுமாரின் உறவினர் பெண்ணும், மவுலியும் சமூக வலைதளம் வாயிலாக, நெருங்கி பழகி வந்ததால் கொலை செய்ததாக தெரிவித்துள் ளனர். தொடர்ந்து, தலைமறைவாக இருந்த ரவுடி விஜயகுமாரை, தேடி வந்த நிலையில், ஓ.எம்.ஆர்., இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே, விஜயகுமார் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை 5:00 மணிக்கு சென்ற தனிப்படை போலீசார், அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். விஜயகுமாரை கைது செய்ய முயன்ற போது, போலீசாரை நோக்கி அவர் கற்களால் தாக்கினார். இதில் காவலர் தமிழரசனுக்கு தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது. மேலும், ரவுடி விஜயகுமார் தப்பியோட முயன்றார். உடனே, மயிலாப்பூர் சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் துப்பாக்கியால் ஒரு ரவுண்ட் சுட்டதில், விஜயகுமாரின் வலது காலில் தோட்டா பாய்ந்து கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த கொலை வழக்கில், தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை