குறிச்சி : குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், செம்மொழி பூங்கா மற்றும் உழவர் சந்தை கட்டப்பட்டதில், முறைகேடு நடந்ததாக, நகராட்சி தலைவர் மீது எம்.எல்.ஏ., தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு, நகராட்சி தலைவர் பிரபாகரன் விளக்கமளித்துள்ளார். எம்.எல்.ஏ., தாமோதரன், கலெக்டரிடம் கொடுத்த மனு விவரம்:குறிச்சி செம்மொழி பூங்கா, திட்ட மதிப்பீட்டினை விட, அதிக செலவில் கட்டப்பட்டுள்ளது. அவசர, அவசரமாக பணிகள் முடிக்கப்பட்டதால், தரமற்ற முறையில் உள்ளது; முறைகேடுகள் நடந்துள்ளன. குறிச்சி நகராட்சித் தலைவர், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, மாநகராட்சியிலிருந்து குடிநீர் பெற ஆர்வம் காட்டாததால், கடந்த ஆறு ஆண்டுகளாக ஐந்து லட்சம் லிட்டர் சிறுவாணி குடிநீர், பெற முடியவில்லை.இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
நகராட்சித் தலைவர் பிரபாகரன் விளக்கம்: கடந்த தி.மு.க., ஆட்சியில், 36 கோடி ரூபாய் மதிப்பில், ஆழியாறு கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டு, நடைமுறையில் உள்ளது. மாநகராட்சி கூடுதல் குடிநீர் வழங்க ஒப்புதல் அளித்தது; குழா# பதித்தபின், மாநகராட்சியிடம் குடிநீர் வழங்க கோரியபோது, கரும்புகடை பகுதியில் அழுத்தம்(பிரஷர்) குறைவாக உள்ளதால், தண்ணீர் வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மாநகராட்சி கமிஷனர் மற்றும் மேயரிடம் முறையிட்டு, தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. செம்மொழி பூங்கா மற்றும் உழவர் சந்தை பணிகள் எவ்வித முறைகேடுமின்றி முடிக்கப்பட்டன. இவ்வாறு தெரிவித்தார்.