உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு... தலைவலி !3 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுமோ

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு... தலைவலி !3 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுமோ

கோவை;கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிட, 41 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளதால், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் மூன்று மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால், அவதிப்படும் நிலை உருவாகியிருக்கிறது.கோவை லோக்சபா தொகுதியில், 53 வேட்பாளர்கள், 59 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். கலெக்டர் அலுவலத்தில் இம்மனுக்கள் நேற்று பரிசீலிக்கப்பட்டன. அதில், பா.ஜ., - தி.மு.க., -- அ.தி.மு.க., -- பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய அங்கீகரிக்கப்பட்ட நான்கு அரசியல் கட்சி வேட்பாளர்கள், பதிவு செய்யப்பட்ட அங்கீகாரமற்ற அரசியல் கட்சிகளை சேர்ந்த எட்டு வேட்பாளர்கள், 29 சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.நாளை மாலை 3:00 மணி வரை மனுக்கள் வாபஸ் பெற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாற்று வேட்பாளர்களின் மனுக்கள் வாபஸ் பெறப்படும். மற்ற வேட்பாளர்களில் யாரேனும் வாபஸ் பெற்றால், அவர்களது பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவர். பின், சின்னங்கள் ஒதுக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், 16 பட்டன்கள் உள்ளன. தற்போது வரை, 41 வேட்பாளர்கள் இருப்பதால், மூன்று ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளர், அவரது மனுவை வாபஸ் பெற்று விடுவார். மேலும், 9 வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெற்றால், 31 வேட்பாளர்கள் களத்தில் இருப்பார்கள்; ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கடைசி பட்டன் நோட்டாவுக்கு ஒதுக்கப்படும்.நோட்டாவை சேர்த்து, 32 பட்டன்களுக்கு வேட்பாளர்கள் பெயர் பொருத்துவதற்கு, இரண்டு இயந்திரங்கள் போதுமானதாக இருக்கும். ஆனால், மனுவை வாபஸ் பெறாமல், 31 வேட்பாளர்களை விட அதிகமானோர் களத்தில் இருந்தால், மூன்று இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும். இது, தேர்தல் பிரிவு அலுவலர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.இதுதொடர்பாக, தேர்தல் பிரிவினர் கூறியதாவது:கோவை லோக்சபா தொகுதியில், 2,048 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படும். இதற்கேற்ப மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 20 சதவீத 'ரிசர்வ்' இயந்திரங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. அந்தந்த சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வசம் இயந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகமாகும் பட்சத்தில், கூடுதல் இயந்திரங்கள் தேவைப்படும். அருகாமையில் உள்ள நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கூடுதலாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இருப்பு வைத்திருந்தால் தருவிக்கப்படும்.மூன்று இயந்திரங்களுக்கு எவ்வாறு இணைப்பு கொடுக்க வேண்டுமென, தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. போதிய பேட்டரிகள் தருவிக்கப்பட்டு வழங்க வேண்டும். அதிகப்படியான வேட்பாளர்கள் போட்டியிட்டால், ஓட்டு எண்ணிக்கையின் போதும் சிரமம் ஏற்படும். ஒவ்வொரு சுற்றும் எண்ணி முடிப்பதற்கும் வழக்கமான அவகாசத்தை காட்டிலும் கூடுதல் நேரம் தேவைப்படும். தேர்தல் முடிவு அறிவிக்க தாமதம் ஏற்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ