உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சைபர் கிரைம் தாக்குதலில் இருந்து தப்ப நமக்கு நாமே துணை:8.2 சதவீதம் பணம் மட்டுமே மீட்கப்பட்டது

சைபர் கிரைம் தாக்குதலில் இருந்து தப்ப நமக்கு நாமே துணை:8.2 சதவீதம் பணம் மட்டுமே மீட்கப்பட்டது

பெ.நா.பாளையம்;கோவை சைபர் கிரைம் பிரிவு போலீசார் கடந்த, 5 மாதத்தில், பொதுமக்கள் சைபர் கிரைம் வாயிலாக இழந்த பணத்தில், 8.2 சதவீதத்துக்கும் குறைவாகவே மீட்டுள்ளனர். இது பொது மக்களிடையே பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது.கோவை மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல பகுதிகளில் மொபைல் போன் வாயிலாக, ஆசை வார்த்தை கூறி, பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பொதுமக்களிடமிருந்து ஆன்லைன் வாயிலாக பணத்தை பறிப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவை சைபர் கிரைம் பிரிவு போலீசில் இந்த ஆண்டு ஜன., முதல் மே மாதம் வரை, 53.07 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதிகரிப்பு

குறிப்பாக, ஆன்லைன் வாயிலாக பகுதி நேர வேலை செய்து அதிகளவு சம்பாதிக்கலாம், இணைய வர்த்தகம் வாயிலாக அதிக வருமானம் ஈட்டலாம். உடனடி தனிநபர் கடன் அட்டை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் லட்சக்கணக்கில் மோசடி செய்து வருவது அதிகரித்து வருகிறது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து, பணத்தை பறிமுதல் செய்யும் பணியில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், பல்வேறு காரணங்களின் அடிப்படையில் பெரிய அளவில் பணத்தை இழந்த நபர்களுக்கு பணத்தை மீட்டு தர முடியாமல் உள்ளது.கோவை சைபர் கிரைம் பிரிவு போலீசார் இந்த ஆண்டு ஜன., 1 முதல் மே மாதம் இறுதி வரை நிதி தொடர்பாக, 2446 மற்றும் மோசடிகள் தொடர்பாக, 906 வழக்குகள் என, மொத்தம், 3,352 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதில் மோசடி செய்யப்பட்ட தொகை, 53 கோடியே, 7 லட்சத்து, 67 ஆயிரத்து, 674 ஆகும். இதில் மீட்கப்பட்ட தொகை வெறும், 4 கோடியே, 31 லட்சத்து, 61 ஆயிரத்து, 707 ஏறக்குறைய, 8.2 சதவீத தொகை மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் தொடர்பாக கடந்த ஐந்து மாதங்களில், 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆன்லைன் வாயிலாக இழந்த, 90 சதவீத பணம் திரும்ப மீட்கப்படவில்லை.

ஏமாற வேண்டாம்

இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில்,'அதிக வட்டி தருவதாக கூறும் நிதி நிறுவனங்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.வேலை வாங்கி தருவதாக கூறி ஆன்லைன் வாயிலாக முன்பணம் செலுத்த வேண்டும் என்று யாராவது கூறினால் அதை நம்ப வேண்டாம். உங்களுடைய மொபைல் போனுக்கு வரும் தவறான கே.ஒய்.சி., லிங்கை தொடுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இணையத்தில் பகிரப்படும் கவர்ச்சிகரமான வர்த்தக தள்ளுபடி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கும் போது யாராவது உங்களுக்கு தானாக வந்து உதவி செய்வதாக கூறினால், மறுத்து விடவும். 'கஸ்டமர் கேர்' எண்களை கூகுளில் தேடும்போது கவனம் தேவை.தவறான எண்களை தொடர்பு கொள்வதன் வாயிலாக ஏமாறும் வாய்ப்பு மிக அதிகம். பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் போட்டோக்களை பேஸ்புக்கில், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளத்தில் பதிவிடுவதை தவிர்த்தல் நல்லது. ஏ.டி.எம்., கார்டு, கிரெடிட் கார்டு, ஓ.டி.பி., மற்றும் இதர வங்கி தகவல்களை பகிர்தல் கூடாது' என்றனர்.

உடன் புகார் செய்ய வேண்டும்

ஆன்லைனில் பணத்தை இழந்தவர்கள் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் செய்ய வேண்டும். பெரும்பாலும் ஒரு வங்கி கணக்கில் இருந்து இன்னொரு வங்கி கணக்குக்கு பணத்தை சட்டவிரோதமாக ஆன்லைன் வாயிலாக மாற்றும்போது விரைவான புகார் எழுந்தால், தீர்வும் விரைவாக கிடைக்கும். காலதாமதமான சைபர் கிரைம் புகாரில் தீர்வு காண்பது கடினம். கடந்த, 2022 செப்., முதல், 2023 ஆக., வரை 2,200 மோசடி கடன் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. சைபர் கிரைம் போலீசார் அவ்வப்போது அறிவிக்கும் விழிப்புணர்வு தகவல்களை மனதில் கொண்டு செயல்பட்டு, பொதுமக்கள் ஆன்லைன் மோசடியில் இருந்து தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி