வைட்டமின் ஏ திரவம்; 17ம் தேதி முகாம் துவக்கம்
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகையில், 200 இடங்களில் வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் முகாம் நடக்கிறது. வைட்டமின் ஏ என்ற உயிர்சத்து, உடலுக்கு இன்றியமையாத ஒரு ஊட்டச்சத்து ஆகும். இச்சத்து ஆரோக்கியமான கண்பார்வைக்கு முக்கிய பங்களிக்கிறது. மேலும், நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திக்கும், தோல் திசு மற்றும் எலும்பு வளர்ச்சிக்கும் தேவையான ஊட்டச்சத்தாகும். இச்சத்து குறைபாட்டினால் வறண்ட விழித்திரை, விழிவெண் திரையில் முக்கோண வடிவத்தில் வெண்ணிறமாக தடித்தல் மற்றும் மாலைக்கண் நோய் போன்றவைகள் ஏற்படும். இவற்றிற்கு தக்க சிகிச்சையளிக்கப்படவில்லை என்றால் பார்வை இழக்க நேரிடும்.இதை கருத்தில் கொண்டு தேசிய அளவில் வருடம் இருமுறை வைட்டமின் 'ஏ' திரவம், நாடு முழுவதும் உள்ள 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வரும் 17ம் தேதி முதல் 22ம் தேது வரை புதன் கிழமை நீங்கலாக நடைபெற உள்ளது. காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகையில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுாகதாரநிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் என 200க்கும் மேற்பட்ட இடங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது.சுகாதாரத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த களப்பணியாளர்கள் வாயிலாக குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இம்முகாம்களில் வைட்டமின் 'ஏ' திரவத்தினை அளித்து பயன்பெற வேண்டும்.