இணையம் வழியாக 400 வீடுகளுக்கு எப்போதும் குடிநீர்! 17வது வார்டு முழுவதும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த முடிவு
கோவை; கோவை, 17வது வார்டு, சேரன் நகரில் 400 வீடுகளுக்கு, இணையம் வழியாக குடிநீர் சப்ளையாகிறது. சிக்கனமாக பயன்படுத்த வழிகாட்டுவதால், வார்டு முழுவதும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு வழங்கி, 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்த, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.கோவை மாநகராட்சி, 17வது வார்டு சேரன் நகரில், 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள, மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது; 46 வீதிகளில் உள்ள, 1,600 வீடுகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.சேரன் நகர், அபிராமி நகர், காந்தி நகர், காளியம்மன் நகர் உள்ளிட்ட, 12 வீதிகளை சேர்ந்த, 400 வீடுகளுக்கு நவீன தொழில்நுட்பத்தில், இணைய பயன்பாடு வழியாக, குடிநீர் வழங்கப்படுகிறது.ஒவ்வொரு வீட்டுக்கும் பிரத்யேக இணைப்பு வழங்கி, 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தப்பட்டு இருக்கிறது. மீட்டர் வழியாகவே வீடுகளுக்கு தண்ணீர் செல்கிறது. ஒரு நபருக்கு 135 லிட்டர்
ஒரு நபருக்கு நாளொன்றுக்கு, 135 லிட்டர் வழங்க வேண்டும் என்கிற விகிதாச்சாரத்தின் படி, ஒரு வீட்டில் ஐந்து நபர்கள் இருப்பதாக உத்தேசமாக கணக்கிட்டு, 675 லிட்டர் குடிநீர் கொடுக்கப்படுகிறது.இந்த அளவீட்டுக்குரிய தண்ணீரை, ஒரு நாளுக்குள் எப்போது வேண்டுமானாலும் பிடித்துக் கொள்ளலாம்; 675 லிட்டர் சென்று விட்டால், சப்ளை தானாக நின்று விடுகிறது. அதன்பின், ஒரு லிட்டர் தண்ணீர் கூட, கூடுதலாக பிடிக்க முடியாது.உறவினர்கள் வந்திருக்கும் நேரத்தில், கூடுதலாக தண்ணீர் தேவைப்படும் பட்சத்தில், மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தால் போதும். சம்பந்தப்பட்ட வீட்டின் எண்ணை கேட்டறிந்து, செயலி மூலமாக, குடிநீர் இணைப்பு ஸ்மார்ட் மீட்டரில் கூடுதலாக தேவைப்படும் அளவை பதிவு செய்கின்றனர்.அடுத்த நிமிடமே, அக்குழாயின் வால்வு திறந்து, கூடுதல் தண்ணீர் சப்ளையாகிறது. 200 லிட்டர் பதிவு செய்திருந்தால், அந்த அளவு சப்ளையானதும், வால்வு மீண்டும் அடைத்துக் கொள்கிறது.இத்திட்டம் சிக்கனமாக குடிநீர் வினியோகிக்கும் முறைக்கு பயனுள்ளதாக இருப்பதால், வார்டு முழுவதும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு வழங்கி, 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
'குடிநீர் வீணாவது தவிர்க்கப்படும்'
மாநகராட்சி அலுவலர்கள் கூறுகையில், 'அரசு நிர்ணயித்துள்ள அளவை காட்டிலும் கூடுதலாகவே குடிநீர் சப்ளை செய்கிறோம். இணைப்பு வழங்கியுள்ள, 400 வீடுகளில், இதுவரை, 80 வீடுகளை சேர்ந்தவர்களே தினமும் முழு கொள்ளளவு தண்ணீர் எடுக்கின்றனர்.மற்ற இணைப்புதாரர்கள் மிகவும் குறைந்த அளவே தண்ணீர் உபயோகிக்கின்றனர். கசிவு ஏற்பட்டால், மாநகராட்சி அலுவலரின் மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்., வருகிறது. சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று சீரமைக்கப்படுகிறது.பரீட்சார்த்த முறையில் இத்திட்டம் செயல்படுத்தியதில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, வார்டு முழுவதும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தப்படும். அடுத்த கட்டமாக, மேற்கு மண்டலத்தில் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இணைப்பு வழங்கப்படும்.மொபைல் போன் மூலமாகவே கண்காணிக்கலாம்; குடிநீர் ஆபரேட்டர் பணிக்கு மனித உழைப்பு தேவையிருக்காது. வீட்டில் விசேஷ நிகழ்ச்சி நடைபெறும் சமயங்களில் கூடுதல் தண்ணீர் தேவைப்பட்டால், மாநகராட்சி அலுவலகத்துக்கு தெரிவித்தால் போதும்; சம்பந்தப்பட்ட வீட்டு இணைப்புக்கு தேவையான அளவு வழங்கப்படும். இத்திட்டத்தில், குடிநீர் வீணாவது முற்றிலும் தவிர்க்கப்படும்' என்றனர்.
'மிகவும் பயனுள்ள திட்டம்'
மோகன்: தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு தண்ணீர் வருகிறது; மிகவும் பயனுள்ள திட்டம். ஆனால், அழுத்தம் குறைவாக இருக்கிறது. சில சமயங்களில் அடைப்பு ஏற்பட்டு, சப்ளை நின்று விடுகிறது. ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தால், அடைப்பை நீக்கி, வினியோகத்தை சீரமைக்கின்றனர். தினமும், 675 லிட்டர் தண்ணீர் பெற முடிகிறது. இதிலுள்ள சிறுசிறு குறைபாடுகளை களைந்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.