கோவை;' எதிர்காலத்தில் மின்வாகனங்கள் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும்; தொழிலுக்கான வாய்ப்புகளையும், நிதி உதவிகளையும் அரசு செய்து வருகிறது' என, எலக்ட்ரோடெக் 2024 கண்காட்சி நிறைவு விழாவில், தொழில்துறையினர் தெரிவித்தனர்.கோவை அவிநாசி ரோட்டில் உள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் கொடிசியா நடத்தும், எலக்ட்ரோடெக் 2024 கண்காட்சி நிறைவு விழாவை முன்னிட்டு, டபிள்யுஆர்ஐ இன்டியாவின் கருத்தரங்கு நடந்தது.'எம்.எம்.எஸ்.இ., வலுப்பெற செய்வோம்' என்ற இந்த கருத்தரங்கில், பசுமை மற்றும் எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கான தயார்நிலைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.கொடிசியா தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். எலக்ட்ரோடெக் கண்காட்சி தலைவர் பொன்ராம் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார்.நிகழ்வில், லகு உத்யோக் பாரதி அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் விஜயராகவன் பேசுகையில், இயன்ற வரை இயற்கையாக கிடைக்கும் ஆற்றலை பயன்படுத்த, கருவிகளை உருவாக்க வேண்டும்; பயன்படுத்த வேண்டும், என்றார்.தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர் சங்கத்தின் (சீமா) தலைவர் மிதுன் ராம்தாஸ் பேசுகையில், கோவையில் பம்ப் தொழிலுக்கு அடுத்தபடியாக, மின் மோட்டார்களை உற்பத்தி செய்ய தேவையான முயற்சிகளை, சீமா மேற்கொண்டு வருகிறது. ஆதற்கான ஆய்வுகளையும், பொருளாதார உதவிகளையும் பெற, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தற்போதுள்ள நிலையில், திறமையான ஆட்கள் கிடைப்பதில்லை. இதை தவிர்க்க திறன் மேம்பாட்டு பயிற்சிகளை கல்லுாரியிலேயே அளிக்க வேண்டும். எதிர்காலத்தில் மின்வாகனங்கள், போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும்; தொழிலுக்கான வாய்ப்புகளையும், நிதி உதவிகளையும் அரசு செய்து வருகிறது, என்றார்.கருத்தரங்கில், இந்திய பவுண்டரிகள் சங்கம் ஐஐஎப் கவுரவ செயலாளர் ஹரி விஸ்வநாதன், சிடார்க் தலைவர் செந்தில்குமார், கோவை எம்.எஸ்.எம்.இ., நிறுவனத்தின் இயக்குனர் ராஜேந்திரன், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு தலைவர் ராஜ் கிஷோர் நாயக் உள்ளிட்டோர் பேசினர்.கொடிசியா கவுரவ செயலாளர் யுவராஜ் நன்றி தெரிவித்தார்.