| ADDED : ஆக 16, 2024 11:02 PM
கோவை;சாலையோரம் நின்றிருந்த பெரிய மரம் ஒன்று, திடீரென சாய்ந்ததில், இரு சக்கர வாகன ஓட்டி படுகாயம் அடைந்தார்.கோவை நஞ்சப்பா ரோடு பார்க் கேட் செம்மொழி பூங்கா அருகில், சாலை ஓரத்தில் பட்டுப்போன நிலையில் இருந்த, 'மே பிளவர்' மரம், நேற்று மாலை 6:00 மணியளவில் திடீரென நடுரோட்டில் சாய்ந்தது. இதில், இரு சக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்த தர்மபுரியை சேர்ந்த சஞ்சய் படுகாயம் அடைந்தார். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மரம் விழுந்ததில், டி.என்.38 சி.பி., 9761 என்ற எண் கொண்ட, ஹூண்டாய் கார் நொறுங்கி பலத்த சேதம் அடைந்தது. காரை ஓட்டி வந்த காரின் உரிமையாளர் ராஜா சுப்ரமணியம், உயிர் தப்பினார். தீயணைப்புத்துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். நஞ்சப்பா ரோட்டில், 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கோவையில் உள்ள பிரதான சாலைகளின் ஓரத்தில், பல இடங்களில் பட்டுப்போன நிலையில் 'மே பிளவர்' மரங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. இதை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.