கோவை:கோவை, கொடிசியா வளாகத்தில், ராணுவ தளவாட உபகரண கண்காட்சி வரும் 28ல் துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது.இதுதொடர்பாக, கொடிசியா தலைவர் திருஞானம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கொடிசியா வளாகத்தில் உள்ள டிபன்ஸ் இன்னொவேஷன் மற்றும் அடல் இன்குபேஷன் சென்டர் இந்தியாவில் ராணுவம் சார்ந்த முதல் இன்குபேஷன் மையம் ஆகும். இதன் வாயிலாக, 25க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகியுள்ளன. ஆண்டுக்கு 32 ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்குவதே இலக்கு. ராணுவத்துக்கான தொழில் உபகரணங்கள் சார்ந்த, ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்கும் விதமாக, இரண்டு நாள் ராணுவ கண்காட்சி வரும் 28ம் தேதி துவங்குகிறது,'' என்றார்.சி.டி.ஐ.ஐ.சி., இயக்குனர் சுந்தரம் கூறியதாவது:இக்கண்காட்சியில், தொழிற்துறையினரோடு, இந்திய தரைப்படை, விமானப்படை, கடற்படை, நிதி ஆயோக், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், முக்கிய அரசுத்துறைகள், கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.60 ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. இதனால், ராணுவத்தின் தேவைகளை தொழில்துறையினர் தெரிந்து கொள்ளும் அதே சமயம், ராணுவம் தங்களுக்குத் தேவையானதை தொழிற்துறையினரிடம் இருந்து பெற்றுக் கொள்ளும், வர்த்தக வாய்ப்பும் உருவாகும்.ஸ்டார்ட் அப் கனவோடு கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், இந்தக் கண்காட்சியைப் பார்த்து, ராணுவத்துக்கான தேவையை, அதிலிருந்து கிடைக்கும் தொழில் வாய்ப்புகளை அறிந்து கொள்ள முடியும்.இந்தோ- - அமெரிக்கன் தொழில் வர்த்தக மையத்துடனான, நமது சந்திப்பின் தொடர்ச்சியாக, அமெரிக்க முதலீட்டாளர்கள் பங்கேற்கின்றனர். இதனால், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முதலீட்டு வாய்ப்பு அதிகரிப்பதோடு, தொழில்நுட்ப பரிமாற்றமும் சாத்தியமாகும். ராணுவம் சார்ந்து, ஸ்டார்ட் அப் தொழில் முனைவுக்கு இக்கண்காட்சி விழிப்புணர்வு ஏற்படுத்தும்.பொதுமக்களும், இந்திய ராணுவம் பற்றி அறிந்து கொள்ளும் வகையில், ராணுவ தளவாடங்கள் காட்சிப்படுத்தப்படும். இரண்டு நாட்களும் ராணுவத்தினர் பல்வேறு பயிற்சி ஒத்திகைகளில் ஈடுபடுவர். காலை 9:00 முதல் மாலை 4:30 மணி வரை கண்காட்சி நடக்கும். அனுமதி இலவசம்.இவ்வாறு, சுந்தரம் தெரிவித்தார்.கொடிசியா செயலாளர் சசிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.