| ADDED : ஜூலை 25, 2024 11:08 PM
கோவை : இந்து மதக்கடவுளின் புனிதத்தை கெடுக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பெரியார் தி.க., மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசாரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.இந்து முன்னணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சதிஷ், ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் நேற்று அளித்த புகார் மனு:கடந்த, 24ம் தேதி எனது சொந்த அலுவல் காரணமாக வெளியே சென்றுகொண்டிருந்தபோது, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பு 'கோவிந்தா, கோவிந்தா, தமிழ்நாட்டுக்கு கோவிந்தா' என்ற கோஷம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது, பெரியார் தி.க.,வினர் காதில் பூ வைத்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எந்த சிறப்பு திட்டங்களும் வழங்கப்படவில்லை எனக்கூறி நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு வரைபடத்தில் 'நாமம்' வரைந்த படங்களையும் வைத்திருந்தனர்.பட்ஜெட்டை கண்டிக்கிறோம் என்ற பெயரில் கோடிக்கணக்கான மக்கள் வணங்கும் இந்துமத கடவுளான பெருமாளின் 'கோவிந்தா' கோஷத்தை கொச்சைப்படுத்தியுள்ளனர். மேலும், நாமம் என்பது நெற்றியில் இடும் பக்தியின் அடையாளங்களில் ஒன்று.எனவே, இந்து மதக்கடவுளான பெருமாளின் புனிதத்தை கெடுக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பெரியார் தி.க.,வினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.