| ADDED : ஆக 23, 2024 12:40 AM
அன்னுார்;'நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்களை கணக்கெடுக்க வேண்டும்', என ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பில் அறிவுறுத்தப்பட்டது. 2025 ஜன. 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற அக். 29ஆம் தேதி வெளியிடுவதாக தெரிவித்துள்ளது.இதையடுத்து அன்னுார் தாலுகா அலுவலகத்தில், அன்னுார் ஒன்றியத்தில் உள்ள 117 ஓட்டு சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. தாசில்தார் குமரி ஆனந்தன் தலைமை வகித்தார். துணை தாசில்தார் (தேர்தல்) தெய்வ பாண்டியம்மாள் பேசியதாவது:ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் செல்ல வேண்டும். வருகிற 2025, ஜன. 1ம் தேதியில் வாக்காளராக தகுதி பெறுபவர் பட்டியலை எடுக்க வேண்டும். வருகிற அக். 1ம் தேதி வாக்காளராகும் தகுதி உள்ளோர் பட்டியலையும் சேகரிக்க வேண்டும்.நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தோர் பட்டியலை கணக்கெடுக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் எவ்வளவு பேர் என்பதை தனியாக குறிப்பிட வேண்டும்.வாக்காளர் பட்டியலில் போட்டோ தெளிவாக இல்லாத வாக்காளர்களின் தெளிவான போட்டோ சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 சதவீதம் நம்பகத்தன்மை உடைய பிழையற்ற வாக்காளர் பட்டியல் தயாரிக்க அனைத்து நடவடிக்கையும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.10 ஓட்டு சாவடிகளுக்கு ஒரு மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பிரச்னை ஏற்பட்டால் மேற்பார்வையாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அல்லது தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் பணி அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும். ஒரு மாதத்திற்குள் இப்பணியை முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பல சந்தேகங்களை எழுப்பினர். இதில் வடக்கு வருவாய் ஆய்வாளர் திவ்யா, கிராம நிர்வாக அலுவலர்கள், ஓட்டு சாவடி நிலை அலுவலர்கள் பங்கேற்றனர்.