இடையூறு ஏற்படுத்தாமல் செல்ல சுற்றுலாப்பயணியருக்கு அட்வைஸ்
பொள்ளாச்சி, ; ஆனைமலை புலிகள் காப்பகம், 1,479 ச.கி.மீ., பரப்பில், பொள்ளாச்சி, மானாம்பள்ளி, வால்பாறை, உலாந்தி, உடுமலை, அமராவதி, வந்தரவு, கொழுமம் ஆகிய எட்டு வனச்சரகங்களை உள்ளடக்கியுள்ளது.இந்த வனப்பகுதியில் அதிகப்படியான யானை, காட்டெருமை், மான், புலி உள்ளிட்ட வனவிலங்குகளும், பல்வேறு வகை பறவையினங்களும் உள்ளன.கோடைக்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், வனத்தில் உள்ள மரங்கள், செடி மற்றும் கொடிகள் காய்ந்து விட்டன. நீராதாரமிக்க குட்டைகள், ஓடை, சிற்றோடை உள்ளிட்டவை வறண்டுள்ளன.இதனால், டிராக்டர் வாயிலாக, நீர்நிலைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டும் வருகின்றன. இருப்பினும், அவ்வபோது, தண்ணீரைத் தேடி இடம் பெயரும் யானைகள், காட்டுமாடு, மான் உள்ளிட்டவை ஆழியாறு - வால்பாறை இடையிலான ரோட்டை கடந்தும் செல்கிறது.வனத்துறையினர் கூறியதாவது: தீத்தடுப்பு நடவடிக்கையாக பையர்லைன் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணியில், வேட்டைத் தடுப்பு காவலர்கள், தீத்தடுப்பு காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.சுற்றுலாப் பயணிகளிடம் தீ பிடிக்கக் கூடிய பொருட்களை வனத்தில் வீசக்கூடாது. பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பயன்பாடு கூடாது. வனத்தின் நடுவே செல்லும் போது, வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் கடந்து செல்ல வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.