| ADDED : ஆக 13, 2024 01:10 AM
கோவை:தென்மேற்கு பருவமழை தீவிரமடைய உள்ளதால், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள, மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மீட்பு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி கலையரங்கில் நேற்று நடந்தது.மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் பேசியதாவது:தென்மேற்கு பருவமழை தீவிரமடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும், 17ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மிதமான மழை, ஒரு சில இடங்களில் கனமழை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களிலும், மழைகுறித்து அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நீரை வெளியேற்று மோட்டார்கள், மர அறுவை எந்திரங்களை தயார் நிலையிலும், கூடுதலாகவும் வைத்திருக்க வேண்டும்.மழையால் பாதிக்கப்படும் இடங்களில், சுகாதாரத்தை காக்க, விரைந்து துாய்மைப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த தயாராக இருக்க வேண்டும். மழையால் பாதிக்கப்படும் மக்களை முகாம்களில் தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான உணவை வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.கூட்டத்தில், துணை கமிஷனர் சிவகுமார், மாநகர் நகர் நல அலுவலர்(பொறுப்பு) பூபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.