பொள்ளாச்சி : பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லாமல், ரோட்டிலேயே பஸ்களை நிறுத்தி பயணியரை இறக்கி விடுவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதற்கு அரசுத்துறை அதிகாரிகள் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொள்ளாச்சியில், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, பழநி, திருச்சி, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. புது பஸ் ஸ்டாண்டிலிருந்து, கேரளா மற்றும் கிராமப் புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் செல்கின்றன.தினமும், ஆயிரக்கணக்கான மக்கள், பஸ் ஸ்டாண்டுகளுக்கு வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள ரோட்டில், பாலக்காடுக்கு செல்லும் வாகனங்கள் அதிகளவு செல்கின்றன.போக்குவரத்து நிறைந்த பகுதியில், புறநகர் மற்றும் கிராமப்புறங்களுக்கு செல்லும் பஸ்கள், பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லாமல் ரோட்டிலேயே நிறுத்துவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.பஸ் ஸ்டாண்டையொட்டி, ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த ரவுண்டானா அருகே உள்ள சப் - கலெக்டர் அலுவலகம், இரண்டு பஸ் ஸ்டாண்டுகள் உள்ளதால், ரோடு முழுக்க நெரிசல் காணப்படுகிறது. பொறுப்பே இல்லை
பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே வரும் பஸ்கள், பயணியரை ஏற்றிச் செல்லும் வரை ரோட்டில் நிறுத்திச் செல்வது வாடிக்கையாகியுள்ளது.அதே போன்று, பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டுக்கு வரும் வெளியூர் பஸ்கள், ரோட்டிலேயே நிறுத்தி பயணியரை இறக்கி விடுகின்றனர். பயணியர் இறங்கும் வரை, மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.அதே நேரத்தில் பஸ் ஸ்டாண்டுக்குள் செல்ல முயலும் பஸ்களும் ரோட்டிலேயே நிற்பதால் போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது.இதனால், அவசர சிகிச்சைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் உடனடியாக செல்ல முடியாத நிலை அவ்வப்போது ஏற்படுகிறது. இது குறித்து போக்குவரத்து போலீசார், அறிவுறுத்தியும், பஸ் டிரைவர்கள் கட்டுப்படாமல் ரோட்டிலேயே நிறுத்திச் செல்கின்றனர்.காலை, 10:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை ஷிப்ட் முடித்துச் செல்லும் ஊழியர்கள், டிப்போவுக்கு செல்ல வேண்டும் என்பதால், பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ்சை விடாமல் ரோட்டிலேயே நிறுத்தி பயணியரை இறக்கி விட்டுச் செல்வது வாடிக்கையாகியுள்ளது.ரோட்டிலே இறங்கும் பயணியர், அடுத்த பஸ்சை பிடிக்க பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து செல்கின்றனர். கூட்டமாக ரோட்டை கடக்க முற்படும் போது விபத்து ஏற்படுகிறது. அட்ராசிட்டி
வயதானோர், கர்ப்பிணிகள், வெயில் மற்றும் மழைக்காலங்களிலும் ரோட்டை கடந்து செல்ல அவதிப்படுகின்றனர். பஸ் ஸ்டாண்டுக்குள் மட்டுமே பயணியரை இறக்கி விட வேண்டும் என, வலியுறுத்தப்படும் சூழலில், ஒரு சிலரின், அட்ராசிட்டியால், மக்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகியுள்ளது. தீர்வு வேண்டும்!
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லாமல், பயணியரை ரோட்டிலேயே இறக்கி விடுவது அதிகரித்து வருகிறது. இது குறித்து கேள்வி கேட்காமல் போக்குவரத்து அதிகாரிகளும் மவுனம் காப்பதால் பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை.ஏற்கனவே போக்குவரத்து நிறைந்த இந்த பகுதியில், ஆக்கிரமிப்புகள் ஒரு பக்கம் என்றால், பஸ்கள் ரோட்டிலே நிறுத்தம் செய்வது மற்றொரு பிரச்னையாக உருவெடுத்து வருகிறது.போக்குவரத்து சம்பந்தமாக, 'டிராபிக் கமிட்டி' கூட்டங்கள் அவ்வப்போது நடத்தப்பட்டன. சம்பிரதாயமாக நடத்தப்பட்ட இந்த கூட்டங்களும், தற்போது நடத்தப்படாமல் உள்ளதால் விதிமுறைகள் மீறல் அதிகளவு அரங்கேறி வருகின்றன.நகரில் நிலவும் நெரிசல் மற்றும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண அரசுத்துறை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.