கோவை : தேசிய அளவிலான எஸ்.ஜி.எப்.ஐ., விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் நடக்கும்பாராட்டு விழாவில் கோவையை சேர்ந்த 35 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.இந்திய பள்ளிகளில் விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கு பல்வேறு மாவட்டங்களில் தேர்வு நடத்தப்பட்டன. அதிலிருந்து, சிறந்த வீரர் - வீராங்கனையினர் தேசிய போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்தாண்டு, எஸ்.ஜி.எப்.ஐ.,யின்67வது தேசிய விளையாட்டு போட்டிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்தன. இதில் தடகளம், இறகுப்பந்து, வூசூ, சைக்கிளிங், கராத்தே, கூடைப்பந்து, வாலிபால், கோ கோ, செஸ், சாப்ட்பால், டென்னிஸ், டேக்வாண்டோ, தாங்டா, ஸ்குவாஷ், ஸ்கேட்டிங் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தமிழக அணி சார்பில் பங்கேற்ற மாணவ - மாணவியர் மொத்தம், 417 பதக்கங்கள் வென்று அசத்தினர். இதில் கோவையை சேர்ந்த 35 மாணவர்கள், ஆறு தங்கம், 13 வெள்ளி மற்றும் 18 வெண்கலப்பதக்கம் என, 37 பதக்கங்கள் வென்றனர்.தேசிய போட்டியில் பதக்கம் வென்றதமிழகமாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடக்கிறது. பாராட்டு விழாவில், கோவையை சேர்ந்த 35 மாணவர்கள் பங்கேற்கின்றனர் என்பது விளையாட்டுத்துறையில் கோவையின் முக்கியத்துவத்தை காட்டுகிறது. இது கோவையை சேர்ந்த மாணவர்கள் பதக்கம் வெல்ல ஊக்கமளித்த மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பெற்றோர் என அனைவருக்குமே பெருமை பெற்றுத்தந்துள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் படிக்கும் மூன்று மாணவர்கள் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.