பொள்ளாச்சி, : பொள்ளாச்சி தொகுதியில், ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்ப வேண்டிய பொருட்கள், 'பேக்கிங்' செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.லோக்சபா தேர்தல் நாளை, 19ம் தேதி நடக்கிறது. இதையடுத்து, பொள்ளாச்சி தொகுதிக்கான ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தும் பொருட்கள் தயார் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.வாக்காளர்கள் சிலிப், வாக்காளர் பட்டியல், போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நகல், பேலட் பேப்பர், பென்சில், பேனா, வெள்ளை தாள், பின், மெழுகுவர்த்தி, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் 'சீல்' வைக்கும் அரக்கு, ரப்பர் பேன்ட், செல்லோ டேப் உள்பட, 42 வகைகளில், 80 பொருட்கள், ஓட்டுச்சாவடிக்கு அனுப்ப வேண்டும்.அவை முறையாக, 'பேக்கிங்' செய்து துணிப்பைகளில் அடைக்கப்பட்டு, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கு ஏற்ப பிரித்து வைக்கும் பணி, கடந்த சில நாட்களாக நடைபெற்றன. அவை முறையாக பிரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இன்று ஓட்டுச்சாவடிகளுக்கு இயந்திரங்களை அனுப்பும் போது, பொருட்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.