| ADDED : மே 29, 2024 12:34 AM
தொண்டாமுத்தூர்;பரமேஸ்வரன்பாளையத்தில், பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், புதிய தானியங்கி காலநிலை நிலையம் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.கோவையின் மேற்கு புறநகர் பகுதியில், மேற்கு தொடர்ச்சி மலையை மூன்று புறமும் அரணாக கொண்டுள்ளது தொண்டாமுத்தூர் வட்டார பகுதி. இயற்கை வளம் செழித்துள்ள இப்பகுதியில், மழை அதிகளவு பெய்யும்.இந்நிலையில், தொண்டாமுத்தூர் வட்டார பகுதியில் பெய்யும் மழையின் அளவை அளவீடு செய்ய, தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் விராலியூர் என, இரு இடங்களில் மழைமானி பொருத்தப்பட்டுள்ளது.இதனை, இங்குள்ள பணியாளர்கள், நாள்தோறும் அளவீடு செய்து, மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பேரிடர் மேலாண்மை துறை சார்பில், தொண்டாமுத்தூர் வட்டாரத்திற்குட்பட்ட பரமேஸ்வரன்பாளையத்தில், புதியதாக தானியங்கி காலநிலை நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.வருவாய்த்துறையினர் கூறுகையில், 'தொண்டாமுத்தூர் வட்டார பகுதியில் இரண்டு மழைமானி மட்டுமே உள்ளது. இங்கு பணியாளர்கள் நேரில் சென்று அளவீடு செய்ய வேண்டும். இங்குள்ள காலநிலையை உடனுக்குடன் அறிந்து, முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.இங்கு அமைய உள்ள, தானியங்கி காலநிலை நிலையத்தின் மூலம் இப்பகுதி மழை அளவு, வெயிலின் அளவு, காற்றின் வேகம் போன்றவற்றை, நேரடியாக, சென்னையில் இருந்து தெரிந்து கொள்ள முடியும். விரைவில், இப்பணிகள் நிறைவடையும்' என்றனர்.