வால்பாறை;மழை காலத்தில், வால்பாறை செட்டில்மென்ட் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என, ஆலோசனை கூட்டத்தில் தாசில்தார் தெரிவித்தார்.வால்பாறை மலைப்பகுதியில் கல்லார்குடி, சங்கரன்குடி, நெடுங்குன்று, பாலகணாறு, உடுமன்பாறை, காடம்பாறை, வெள்ளிமுடி, கருமுட்டி உள்ளிட்ட, 13 ஆதிவாசி செட்டில்மென்ட்கள் உள்ளன.இந்நிலையில், பழங்குடியின மக்களுக்கான ஆலோசனைக்கூட்டம், வால்பாறை தாலுக்கா அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வால்பாறை தாசில்தார் வாசுதேவன் தலைமை வகித்து பேசியதாவது:வால்பாறையில் தென்மேற்குப் பருவமழை தீவிரமாக பெய்யும் நிலையில், பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மழை காலங்களில் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாடும் இருக்க வேண்டும்.மழை தீவிரமடைந்தால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். போதை பொருளுக்கு பழங்குடியின மக்கள் ஒரு போதும் அடிமையாகக்கூடாது.இவ்வாறு, பேசினார்.பழங்குடியின மக்கள் பேசும்போது, 'செட்டில்மெண்ட் பகுதியில் ரோடு வசதியில்லை. தண்ணீர், கழிப்பிடம், நடைபாதை உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை. விவசாய நிலங்களை விரிவுபடுத்த வேண்டும்.நாங்கள் வசிக்கும் பகுதியில் போதை பொருட்கள் யாரும் பயன்படுத்துவதில்லை. எங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நகராட்சி சார்பில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்,' என்றனர்.கூட்டத்தில், வனத்துறை, போலீஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.