உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காந்தையாற்றில் நீர்வரத்தால் பாலம் பணிகள் பாதிப்பு

காந்தையாற்றில் நீர்வரத்தால் பாலம் பணிகள் பாதிப்பு

மேட்டுப்பாளையம்:காந்தையாற்றில் நீர் வருவதால், பாலம் கட்டும் பணிகள் பாதிப்பு அடைந்துள்ளது. சிறுமுகை அருகே லிங்காபுரத்திற்கும், காந்த வயலுக்கும் இடையே, காந்தையாற்றின் குறுக்கே, 15.40 கோடி ரூபாய் செலவில், உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன.ஆற்றின் குறுக்கே, 168 மீட்டர் நீளம், 9.95 மீட்டர் அகலத்தில் பாலமும், பாலத்தின் இரண்டு புறம், 75 மீட்டர் நீளத்துக்கு நடைபாதையும், சாலையும் போடப்பட உள்ளன. உயர் மட்ட பாலம் அமைக்க, ஆற்றின் குறுக்கே ஆறு இடங்களில் தூண்கள் கட்ட வேண்டும்.இதுவரை மூன்று தூண்களும், பாலத்தின் இரண்டு பக்கம் அபர்மெண்ட் தடுப்பு சுவரும், கட்டப்பட்டு உள்ளன. ஆற்றின் மையப்பகுதியில் மூன்று தூண்கள் கட்ட வேண்டும். அதில் ஒரு தூண் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மற்ற இரண்டு தூண்கள் அமைக்க, ஆற்றின் மையப்பகுதியில் குழி தோண்டி வைக்கப்பட்டிருந்தன. கடந்த இரண்டு நாட்களாக, கோத்தகிரி மலைப்பகுதியில் பெய்த மழையால், காந்தையாற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதனால் ஆற்றின் மையப்பகுதியில், தூண் அமைக்க தோண்டிய குழிகளில், மழை நீர் புகுந்தது. மேலும் அதிகமான தண்ணீர் தேங்கியதால், குழியை சுற்றிலும் இருந்த மண் குவியல், சரிந்து விழுந்தன. இதனால் தூண்கள் அமைக்கும் பணிகள் பாதிப்பு அடைந்துள்ளன. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: மூன்று இயந்திரங்களையும், குறைவான ஆட்களையும் வைத்து வேலை செய்கின்றனர். இவ்வளவு பெரிய திட்டப் பணிகள் செய்ய, அதிகமான ஆட்களை வைத்து, வேலை செய்ய வேண்டும். இரண்டு ஆண்டில் பாலம் கட்டி முடிக்க, திட்டமிடப்பட்டு உள்ளது. பணிகள் துவங்கி ஒரு ஆண்டு ஆன நிலையில், பாதி வேலைகள் கூட நடைபெறவில்லை. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை பெய்யும் போது, பில்லூர் அணைக்கும், பவானிசாகர் அணைக்கும் வெள்ளம் பெருக்கெடுத்து வரும். அப்போது காந்தையாற்றிலும் வெள்ளநீர் அதிக அளவில் ஓடும். இதனால் கட்டுமான பணிகள் முற்றிலுமாக பாதிப்படையும்.எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், போர்க்கால அடிப்படையில், அதிக ஆட்களையும், சில நவீன இயந்திரங்களையும், வைத்து ஆற்றின் மையப்பகுதியில், தூண்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ