கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, லட்சுமி நகரில் வீட்டில் வளர்க்கும் நாய்களை ரோட்டில் கட்டுப்பாடின்றி விடுவதால், நடந்து செல்வோரையும், வாகனத்தில் செல்வோரையும் விரட்டி சென்று கடிப்பதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமி நகரில், குடியிருப்பு மற்றும் கடைகள் அதிகரித்து வருகிறது. மேலும், இந்த வழியாக நாள்தோறும் ஏராளமானோர் பயணிக்கின்றனர்.இங்குள்ள மக்கள் செல்லப்பிராணியாக நாய், பூனை மற்றும் லவ் பேர்ட்ஸ் போன்றவைகள் வளர்கின்றனர். இதில், அன்பு நகர் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் அதிகளவில் நாய் வளர்க்கப்படுகிறது. இந்த நாய்கள் கடந்த சில நாட்களாக அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் மற்றும் ரோட்டில் பயணிப்பவர்களை விரட்டி சென்று கடிப்பதால், அவ்வழியாக மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.இதுகுறித்து, மக்கள் கூறியதாவது:கடந்த சில நாட்களாக இப்பகுதி வழியாக செல்ல அச்சமாக உள்ளது. இங்குள்ள வீடுகளில் வளர்க்கும் நாய்களை, எவ்வித கட்டுப்பாடும் இன்றி ரோட்டில் விடுகின்றனர். வளர்ப்பு நாய்கள், ரோட்டில் நடந்து செல்வோரையும், வாகனத்தில் செல்வோரையும் விரட்டி சென்று கடிக்கின்றன.இப்பகுதியில், இதுவரை நான்கு பேரை நாய்கள் கடித்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும், மாலை நேரத்தில் குழந்தைகளை விளையாட வெளியில் அனுப்பினால் அவர்களை நாய்கள் துரத்துகின்றன. இதனால், குழந்தைகள் வெளியில் சென்று விளையாட அச்சப்படுகின்றனர்.இது பற்றி, நாய் உரிமையாளர்களிடம் கூறினாலும், நாயை வீட்டினுள் கட்டி வைக்காமல் அலட்சியமாக உள்ளனர். பைக்கில் செல்பவர்களை விரட்டி சென்று கடிப்பதால், விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, நாய் உரிமையாளர்கள் மீது ஊராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வளர்ப்பு நாயை கட்டுப்படுத்த வேண்டும்.இவ்வாறு, கூறினர்.