புதிய தார் சாலை அமைக்க கோரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
பெ.நா.பாளையம்; நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட ராஜேந்திரா நகர் பகுதியில் புதிய தார் சாலை அமைக்க கோரியும், பழுதான சாலையை செப்பனிடவும், பொதுமக்கள் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்..நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ராஜேந்திரா நகர், எக்ஸ்டென்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் சாலைகள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், பல இடங்களில் புதிய தார் சாலை அமைக்க வேண்டிய சூழல் உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட நிர்வாகத்துக்கும், பேரூராட்சி நிர்வாகத்துக்கும் பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.இந்நிலையில் நேற்று காலை ராஜேந்திரா நகர் பகுதியில் வசிக்கும், 100க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து, ராஜேந்திரா நகர் பொதுமக்கள் கூறுகையில்,'ராஜேந்திரா நகர் மற்றும் ராஜேந்திரா நகர் எக்ஸ்டென்ஷன் ஆகிய பகுதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. இங்கே எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யப்படுவதில்லை. 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே அத்திக்கடவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பேரூராட்சி முழுவதும் ஒரே மாதிரியான, சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எங்கள் பகுதியில் பழுதான தார் சாலையை உடனடியாக செப்பனிட்டும், புதிய தார் சாலை அமைத்தும் தர வேண்டும்' என்றனர்.நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'புதிதாக தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு கோரி, உயர் அதிகாரிகளுக்கு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. உரிய நிதி ஒதுக்கீடு செய்த பிறகு பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும். நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய தகுந்த ஆய்வுகள் செய்து, விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றனர்.