பொள்ளாச்சி;'கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா தலைமை வகித்தார்.சிறகுகள் மக்கள் அமைப்பு சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:ஆனைமலை அருகே கோட்டூர் மலையாண்டிபட்டணம், தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், 112 வீடுகள் கட்டும் பணி, 5.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று, கடந்த, 2023ம் ஆண்டு செப்., 16ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.முகாமில் வசிப்போருக்கு கழிவுநீர் தொட்டி சிறிய அளவில் உள்ளதால், கழிவுநீர் வெளியேறி வருகிறது. கழிவுநீர் தொட்டி மீது சிலாப் அமைக்காததால் துர்நாற்றம் வீசுவதுடன், கிருமிகள் பரவும் அபாயம் உள்ளது.குழந்தைகள், முதியோர் அதிகளவில் காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகளால் மருத்துவமனைக்கு செல்கின்றனர். மேலும், டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக கடந்த, மூன்று மாத காலமாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும், எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.கழிவுநீர் தொட்டிக்கு நிரந்தர கான்கிரீட் சிலாப் அமைத்தும், பேரூராட்சி வாயிலாக கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் மீது புகார்
சூளேஸ்வரன்பட்டி பகுதியை சேர்ந்த ஹரிபுவேனஸ்வரி அவரது உறவினர்கள், பொதுமக்களுடன் வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:அரவிந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன்; நான்கு மாத ஆண் குழந்தை உள்ளது. அரவிந்த், ஆக்டிங் டிரைவாக பணியாற்றினார். கடந்த, 4ம் தேதி பேரூரில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றார். அடுத்த நாள் அரவிந்த் கொலை செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தது.இதுகுறித்து, பொள்ளாச்சி கிழக்கு போலீசாரிடம் விசாரித்த போது, கொலை செய்த விமல், பைசலை கைது செய்ததாக கூறினர். அவர்கள் மீது பட்டியல் ஜாதிகள் மற்றும் பழங்குடிகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும், மற்ற குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினேன். ஆனால், போலீசார் அந்த பிரிவில் வழக்குப்பதிவு செய்யவில்லை. எனவே, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறியுள்ளனர். பஸ் இயக்கணும்!
ஆண்டிபாளையம், வஞ்சிபாளையம் பகுதி மக்கள் கொடுத்த மனுவில், 'இந்த கிராமம் வழியாக, 48ம் நம்பர் பஸ், கப்பளாங்கரை, செட்டிபாளையம், செட்டிபுதுார், வஞ்சிபாளையம், பெரியகளந்தை ஆகிய கிராமங்கள் வழியாக இயக்கப்படும். ஆனால், பல நேரங்களில் பஸ் வருவதில்லை. பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சரியான நேரத்துக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தியுள்ளனர்.