கோவை;''வெள்ளலுார் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க, துாய்மை பணியாளர்கள் உயிரை பணயம் வைத்துள்ளீர்கள்; சிறந்த மாநகராட்சி விருதும் உங்களால்தான் கிடைத்தது,'' என, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், புகழாரம் சூட்டினார்.வெள்ளலுார் குப்பைக்கிடங்கில், தீ தடுப்பு பணிகளில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்கள், துாய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி கலையரங்கில் நேற்று நடந்தது. இதில் 800 பேருக்கு, மேயர் ரங்கநாயகி, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.பின்னர், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பேசியதாவது:கடந்த ஏப்., மாதம் வெள்ளலுார் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைத்தது என்பது கடுமையான பணி. அந்த சமயத்தில் தண்ணீர் தட்டுப்பாடு வேறு. தண்ணீரை தேடி கிணறு, கிணறாக அலைந்தோம். துாய்மை பணியாளர்கள் உள்ளே கால் வைத்தவுடன்தான், தீயை அணைக்க முடியும் என்ற நம்பிக்கையே வந்தது. புகை மூட்டமாக இருந்த இடத்தின் காட்சியை மாற்றியமைத்தவர்கள், துாய்மை பணியாளர்கள்தான். மிக குறைந்த நாளில், தமது உயிரை பணயம் வைத்து தீயை அணைத்துள்ளனர். இதில் ஒவ்வொருவரும் உழைப்பை கொடுத்துள்ளனர். உங்கள் பணியால்தான், கோவை மாநகராட்சிக்கு சுதந்திர தினத்தன்று, சிறந்த விருது கிடைத்தது.இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து, மாநகராட்சியில், 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியவர்கள் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். கடந்த கல்வியாண்டில், பிளஸ்2 பொது தேர்வில் பாடவாரியாக, 100க்கு, 100 மதிப்பெண் பெற்ற, 26 பேர், பத்தாம் வகுப்பில், 17 பேர் என, 43 மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதே போல், சிறந்த முறையில் பயிற்றுவித்த, 236 ஆசிரியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாநகராட்சி துணை மேயர் வெற்றிசெல்வன், துணை கமிஷனர் சிவகுமார், மண்டல தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.