உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சி.என்.எஸ்., ஆயிரம் முதல்வர் மருந்தகம் பொங்கல் தினத்தில் துவக்கம் * சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

சி.என்.எஸ்., ஆயிரம் முதல்வர் மருந்தகம் பொங்கல் தினத்தில் துவக்கம் * சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

கோவை:கோவையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.அதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஆக., 14ம் தேதி பொது மருத்துவ அவசர அறிவிப்பில், குரங்கு அம்மை நோய் பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாட்டில் துவங்கிய இந்த பாதிப்பு உலகம் முழுவதும் பரவி தற்போது, 123 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் குரங்கு அம்மை பாதிப்பு குறித்து ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை கண்காணித்து அவர்களுக்கு குரங்கு அம்மை பாதிப்புக்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதை கண்டறிந்து, உரிய சிகிச்சை வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் இதற்கென தனி வார்டு உருவாக்கப்பட்டு அதில் மருத்துவ குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.இத்தோடு, பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு பாதிப்பு இருக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் மட்டும் இன்றி துாத்துக்குடி, சென்னை உள்ளிட்ட துறைமுகங்களிலும் கப்பல் வழியே வரும் பயணிகளுக்கு குரங்கு அம்மை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. விமான நிலையங்களில் குரங்கு அம்மை பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளது.குரங்கு அம்மை நோய் பாதிப்பு தொற்றுநோய் என்பதால் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை, கோவை அரசு மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவமனை, திருச்சி அரசு மருத்துவமனைகளில் இதற்கான பிரத்தியேக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. இதனால் தமிழக - கேரள எல்லையோர பகுதிகளில் சோதனை தேவையில்லை.முதல்வர் மருந்தகத் திட்டம், பொங்கல் தினத்தன்று துவங்கி வைக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக ஆயிரம் மருந்தகங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் மிகக் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும். எந்தெந்த இடங்களில் இந்த மருந்தகங்களை அமைக்கலாம், என்னென்ன மருந்துகள் அடிப்படையாக தேவைப்படுகிறது என்பது குறித்த ஆய்வு நடைபெறுகிறது. ஏற்கனவே மத்திய அரசு இதேபோல் மலிவு விலை மருந்தகங்களை நடத்தி வருகிறது. மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பை பொறுத்தவரை அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரிகளிலும் சி.சி.டி.வி., பொருத்தப்பட்டு அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மருத்துவமனைகளில் குழந்தைகள் கடத்தப்படும் சம்பவங்களில் கூட சில மணி நேரங்களில் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை மீட்டுள்ளனர்.கோவை அரசு மருத்துவக் கல்லுாரியில் மருத்துவ மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உரிய அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது, மாவட்ட கலெக்டர், அரசு மருத்துவமனையில் அவ்வப்போது ஆய்வு செய்து பாதுகாப்பினை உறுதி செய்து வருகிறார். கோவை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மருத்துவமனை கட்டடம் விரைவில், முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை