உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 10 ஆயிரம் பயணிகளை கையாளும் கோவை விமான நிலையம் அதிகரிக்கும் விமானங்களால் பயன்பாடும் அதிகரிப்பு

10 ஆயிரம் பயணிகளை கையாளும் கோவை விமான நிலையம் அதிகரிக்கும் விமானங்களால் பயன்பாடும் அதிகரிப்பு

-நமது நிருபர்-ஒரே நாளில் 10 ஆயிரத் தைத் தாண்டி, கோவை விமான நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை, மேலும் அதிகரித்துள்ளது.கோவை சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இங்கிருந்து வெளிநாட்டு விமான சேவை குறைவாக இருந்தாலும், உள்நாட்டு விமானங்களில் பயணித்து, வேறு நகரங்களிலிருந்து வெளிநாடு செல்வோர் அதிகமாகவுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாக பயணிகள் எண்ணிக்கை, அதிகமாகிக் கொண்டிருக்கிறது.கடந்த ஆண்டில் கோவை விமான நிலையத்திலிருந்து, 1339 வெளிநாட்டு விமானங்களும், 17 ஆயிரத்து 57 உள் நாட்டு விமானங்களும் இயக்கப்பட்டன.இந்த விமானங்களின் வழியாக, 2 லட்சத்து 11 ஆயிரத்து 87 பேர், வெளிநாடுகளுக்கும், 26 லட்சத்து 93 ஆயிரத்து 524 பேர், உள்நாட்டிலுள்ள பல்வேறு நகரங்களுக்கும் பயணம் செய்துள்ளனர்.கடந்த நிதியாண்டில், 29 லட்சத்து 4,611 என்ற எண்ணிக்கையிலான பயணிகளைக் கையாண்டு, கோவை விமான நிலையம் சாதனை படைத்தது.அதாவது அதற்கு முந்தைய ஆண்டை விட, 14 சதவீதம் அளவுக்கு, அதிகளவு பயணிகளைக் கையாண்டது. இந்த எண்ணிக்கை, நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த ஜூன் 2 அன்று, இது புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.அன்று ஒரு நாளில் மட்டும், கோவையிலிருந்து 27 விமானங்கள் புறப்பட்டுள்ளன; அதே அளவு விமானங்கள் இங்கு வந்துள்ளன.இவற்றில், 4804 பயணிகள் சென்றுள்ளனர்; மொத்தம் 4502 பேர், இங்கு வந்துள்ளனர். ஒட்டு மொத்தமாக, ஒரே நாளில் 10 ஆயிரத்து 95 பயணிகள், கோவை விமான நிலையத்தைப் பயன் படுத்தியுள்ளனர்.

டில்லிக்கு புதிய விமானம்!

கடந்த 2ம் தேதி முதல், கோவையிலிருந்து டில்லிக்கு ஏர் இந்தியா விமானம் புதிதாக இயக்கப்படுகிறது. இந்த விமானம், டில்லி (டி 3) சர்வதேச விமான நிலையத்துக்கு நேரடியாகச் செல்வதால், கோவையிலிருந்து அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்குச் செல்வோருக்கு, பெரிதும் உதவியாகவுள்ளது. இதனால் இனி வரும் நாட்களில், இங்கிருந்து வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி