பெ.நா.பாளையம் : தடாகம் பகுதியில் சின்னவேடம்பட்டி ஏரியின் நீர் வழித்தடங்களை சீரமைக்க, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வுப்பணி மேற்கொண்டனர்.கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில், 200 ஏக்கர் பரப்பளவில் சின்னவேடம்பட்டி ஏரி உள்ளது. தடாகம் வட்டார மேற்கு தொடர்ச்சி மலையில், பருவ காலங்களில் பெய்யும் மழை நீர், வெள்ளமென பெருகி கணுவாய் மேல், கீழ் தடுப்பணைகள், சோமையம்பாளையம் தடுப்பணைகளை நிறைத்து விஸ்வநாதபுரம், துடியலூர் வரை ராஜ வாய்க்கால் வாயிலாக வந்து, சின்னவேடம்பட்டி ஏரியை அடைகிறது. இதனால், காளப்பட்டி, விளாங்குறிச்சி, ஆண்டக்காபாளையம், செரயாம்பாளையம், சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஆனால், கடந்த, 25 ஆண்டுகளாக சின்னவேடம்பட்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்து போனது. இதற்கு காரணம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து சின்ன வேடம்பட்டி ஏரிக்கு வரும் பாதையில் உள்ள நீர் வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதும், செங்கல் சூளைகளுக்கு அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததும் தான் காரணம் என, தெரியவந்தது. இதையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன்பு நமக்கு நாமே திட்டத்தில், 60 லட்சம் ரூபாய் செலவில் சின்னவேடம்பட்டி ஏரி சீரமைக்கப்பட்டது. அதன் பின்னர் குறைந்த அளவே நீர் வரத்து இருந்தது.சின்னவேடம்பட்டி ஏரிக்கு நீர்வரத்தை அதிகரிக்கவும், ராஜ வாய்க்கால் மற்றும் தடாகம் வட்டாரத்தில் உள்ள நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மற்றும் அதிகாரிகள், நீர் வழித்தடங்களில் ஆய்வு பணி மேற்கொண்டனர்.ஆய்வு பணிகள், நஞ்சுண்டாபுரம், சின்னதடாகம், மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் வரைபட உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. நீர் வழித்தடங்களை முழுமையாக சீரமைக்க, சிறப்பு திட்டத்தை உருவாக்கி, செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி தலைமை இன்ஜினியர் அன்பழகன், நீர்வளத் துறை சிறப்பு என்ஜினீயர் அம்சராஜ், கவுசிகா நீர் கரங்கள் ஒருங்கிணைப்பாளர் சிவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.