| ADDED : மே 30, 2024 12:48 AM
கோவை: அரசு மருத்துவமனையில், வியாபாரியின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டது. அவரது உடலுக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில், மரியாதை செலுத்தப்பட்டது.தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த மொப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ், 46; இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர். முனிராஜ், குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி பால் வியாபாரம் செய்து வந்தார். கடந்த, 27ம் தேதி உடல்நிலை குறைவு காரணமாக, அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.பரிசோதனையில், அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மூளைச்சாவு ஏற்பட்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து முனிராஜின் குடும்பத்தினர், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். தொடர்ந்து, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி முனிராஜின் கண்கள், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை தானமாக பெறப்பட்டன.அதில் கல்லீரல், ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கும், அனுப்பி வைக்கப்பட்டது. முனிராஜின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மருத்துவமனை டீன் நிர்மலா, மருத்துவ மனை ஊழியர்கள் ஆறுதல் கூறி, உடலுக்கு மரியாதை செய்து அனுப்பி வைத்தனர்.