கோவை : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள் பலருக்கு, தமிழ் பாடத்தில் மட்டும் மதிப்பெண் குறைந்துள்ளது.பிற பாடங்களை போல், மொழி பாடங்களில், சென்டம் மதிப்பெண் பெரும்பாலும் வழங்கப்படுவதில்லை. 99 என்பதே பெரும்பாலும், தமிழ் பாடத்தை பொறுத்த அளவில் முதல் மதிப்பெண்ணாக இருக்கும். நடப்பாண்டு தேர்வு முடிவில், பல பள்ளிகளில், தமிழ் பாடத்தில் மட்டும் மதிப்பெண்கள் குறைந்துள்ளதாக அதிருப்தி எழுந்துள்ளது. மதிப்பீட்டு பணிகளில் ஏற்பட்ட குழப்பமே இதற்கு காரணமாக இருக்ககூடும் என தெரிகிறது.டாப்பர் மாணவிகள் பலர், தமிழ் பாடத்தில் எதிர்பாராத அளவிற்கு மதிப்பெண் குறைந்ததால், மொத்த மதிப்பெண்களும் சரிந்ததாக, கண்ணீர் விட்டனர். ஆசிரியர் சிவகாமி கூறுகையில், ''எங்கள் பள்ளியில், வழக்கமாக 95க்கு மேல் தமிழ் பாடத்தில் மதிப்பெண் பெறும் பல மாணவர்களின் மதிப்பெண் 69, 74 என குறைவாக உள்ளது. இம்முறை, பல மாணவர்கள் தமிழ் பாடத்திற்கு மட்டும், மறுமதிப்பீடு செய்ய ஆசிரியர்கள் நாங்களே அறிவுறுத்தியுள்ளோம்,'' என்றார். மாணவி அனன்யா கூறுகையில், ''தமிழ் பாடத்தில் எனக்கு ஆர்வம் அதிகம், பள்ளி தேர்வுகளில், 95 மதிப்பெண்களுக்கு குறைவாக மதிப்பெண் பெற்றதில்லை. பொதுத்தேர்விலும் அனைத்து கேள்விகளையும் சரியாக எழுதி இருந்தேன். ஆனால், பெரிய அளவில் மதிப்பெண் குறைந்ததால், மொத்த மதிப்பெண்களும் குறைந்துள்ளது. மறுமதிப்பீடு விண்ணப்பிக்கவுள்ளேன்,'' என்றார்.