| ADDED : ஏப் 20, 2024 01:06 AM
பல்லடம்;வாக்காளர்கள் ஓட்டுச்சாவடி வாளாகத்துக்குள் மொபைல் போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து பல்லடம் அருகே தி.மு.க., எம்.எல்.ஏ., செல்வராஜ், தர்ணாவில் ஈடுபட்டார்.திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஓட்டுச்சாவடி வளாகத்துக்குள் வாக்காளர்கள் மொபைல் போன் எடுத்துச் செல்லக்கூடாது என, போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, ஓட்டுச்சாவடியில் ஆய்வு மேற்கொள்ள வந்த திருப்பூர் தெற்கு தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., செல்வராஜ், இது குறித்து அறிந்து, மங்கலம் ரோட்டில் தர்ணாவில் ஈடுபட்டார். சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தார். போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.தி.மு.க.,வினர் கூறுகையில், ''ஓட்டுச் சாவடி மையத்துக்குள் மொபைல் போன் எடுத்துச் செல்லக் கூடாது என்ற விதிமுறை உள்ளதே தவிர, வளாகத்துக்குள்ளையே எடுத்துச் செல்லக்கூடாது என்று கூறப்படவில்லை. ஆனால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓட்டு சாவடி வளாகத்துக்குள்ளும் மொபைல் போன் எடுத்துச் செல்லக்கூடாது என, எஸ்.பி., அறிவுறுத்தியதாக கூறினார். இதனால், பொதுமக்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படுகிறது. இது ஓட்டுப்பதிவை குறைக்கும் செயலாகும்''என்றார்.