உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பதில் சொல்லாதீங்க... ரோடு போட்டுத்தாங்க! மேயரிடம் மன்றாடுகிறார் ஒரு மூத்த குடிமகன்

பதில் சொல்லாதீங்க... ரோடு போட்டுத்தாங்க! மேயரிடம் மன்றாடுகிறார் ஒரு மூத்த குடிமகன்

கோவை:மாநகராட்சிப்பகுதியில், சேதமான 500 மீட்டர் நீள இடத்தில் ரோடு போட, எட்டு வருடங்களாக போராடும், ஓய்வு பெற்ற வங்கி ஊழியரை, 'அந்தா இந்தா' என அலைய விடுகிறது மாநகராட்சி.கோவை மாநகராட்சி அலுவலகத்தில் சமீபத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்துக்கு, வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற, 66 வயது நடராஜன் என்பவர் வந்திருந்தார். அவர் வசிக்கும், 44வது வார்டு சாயிபாபா காலனி, கே.கே.புதுார், ராமலிங்க நகர் நான்காவது தெருவில், 'மருதம் பாக்கியா அடுக்குமாடி குடியிருப்பு'க்கு எதிர் சாலையில், 500 மீட்டர் துாரத்துக்கு ரோடு குண்டும் குழியுமாக இருக்கிறது. புதிதாக ரோடு போட்டுக் கொடுங்கள் என, மேயர் ரங்கநாயகியிடம் மனு கொடுத்தார். அப்போது, 'பதில் மட்டும் தராதீர்கள்; ரோடு போட்டுத் தாங்கள்' என, அவர் மன்றாடினார். இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:ராமலிங்கா நகர் நான்காவது வீதியில் ஆறு இடங்களில், வேகத்தடை சேதம் அடைந்திருக்கிறது; 6 இடங்களில் பாதாள சாக்கடை மேல் மூடி சாலையில் இருந்து ஒரு அடி உயர்ந்திருக்கிறது. இச்சாலை மேடு பள்ளமாக, குண்டும் குழியுமாக உள்ளது. இந்த ரோட்டை சீரமைக்கவில்லை. அருகாமையில் உள்ள மற்ற சாலைகளை சீரமைப்பதால், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தோம்; முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினோம். இதற்கு, 'புகார் ஏற்கப்பட்டது; தீர்வு காணப்பட்டது' என, மாநகராட்சியில் இருந்து பதில் அனுப்பி, மனுவை மூடி விடுகின்றனர்.மாநகராட்சி இணைய தளம் வழியாக, 15 புகார்கள் பதிவு செய்தேன். அதற்கு, 'விரைவில் சரி செய்யப்படும்' என்ற பதிலோடு புகாரை மூடி விட்டனர். இச்சூழலில், உதவி நிர்வாக பொறியாளர் சபிதா நேரில் ஆய்வு செய்து, அடுத்தாண்டு நிதி ஒதுக்கி, சாலை போடப்படும் என கூறிச் சென்றார். அருகாமையில் உள்ள சாலைகள், ஏப்., மாதம் போடப்பட்டது; இச்சாலை மட்டும் விடுபட்டுள்ளது; இதற்கான காரணம் என்ன என்கிற கேள்விக்கு, அதிகாரிகளிடம் பதில் இல்லை. மனுக்களுக்கு பதில் அனுப்புகிறார்களே தவிர, சாலை போடுவதற்கு நடவடிக்கை எடுப்பதில்லை. 500 மீட்டர் நீளத்துக்கு ரோடு போட, எட்டு வருடங்களாக போராடுகிறேன்.இவ்வாறு, நடராஜன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !