கோவை : கோவை ரேஸ்கோர்ஸ் அப்துல் ரஹீம் சாலையில் அமைந்துள்ள, மின் பகிர்மான வட்ட அலுவலகத்தில் மின் குறைத்தீர் கூட்டம், மேற்பார்வை பொறியாளர் சதிஷ்குமார் தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், பத்துக்கும் குறைவான மக்கள் பங்கேற்று, தீர்வு பெற்றனர். இக்கூட்டம், காலை, 11:00 மணிக்கு துவங்கி, 1:00 மணி வரை நடைபெற்றது. கோவை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட செயற்பொறியாளர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று, துறை சார்ந்த செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினர். இதில், மேற்பொர்வை பொறியாளர் சதிஷ்குமார் கூறியதாவது: ஒவ்வொரு மாதமும் மின்பகிர்மான வட்ட மைய கோட்ட அலுவலகத்தில் குறைத்தீர் கூட்டம் நடத்தப்படுகிறது. மின்நுகர்வோர் எவ்வித குறைபாடுகள் இருப்பினும், கூட்டத்தில் தெரிவித்து, உடனடி தீர்வை பெறமுடியும். பொதுமக்கள் மின்பயன்பாட்டில் மிகவும் சிக்கனமாகவும், கவனமுடனும் செயல்படவேண்டும். வீடுகளில் மின்சாரம் சார்ந்த பாதுகாப்பை உறுதி செய்ய, ஆர்.சி.சி.பி., டிரிப்பர் பொருத்திக்கொள்ள வேண்டியது அவசியம். புதிதாக கட்டப்படும் வீடுகளில், இதனை கட்டாயமாக்கியுள்ளோம். ஆகையால், பழைய வீடுகளில் ஆர்.சி.சி.பி., பொருத்திக்கொள்வது பாதுகாப்பானது. மின் சாதனங்களை வாங்கும் போது, விலை மலிவு என்று தரமற்ற பொருட்களை வாங்கி விடக்கூடாது. மழை சமயங்களில், மின் ஒயர்கள் கீழே விழுந்து கிடந்தால் மின்வாரியத்திற்கு உடனடியாக தகவல் அளிப்பதுடன், அலுவலர்கள் வரும் வரை அங்கு யாரும் செல்லாமல், அப்பகுதி மக்கள் கண்காணிக்க வேண்டியது அவசியம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.