| ADDED : ஜூலை 24, 2024 08:29 PM
வால்பாறை : ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் வால்பாறை அமைந்துள்ளது. இங்குள்ள மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய இரு வனச்சரகங்களிலும், புலி, யானை, சிறுத்தை, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன.இது தவிர, மாநில விலங்கான வரையாடு, சிங்கவால் குரங்குகள் வால்பாறை மலைப்பகுதியில் அதிக அளவில் உள்ளன.இந்நிலையில், ஆழியாறு அணையிலிருந்து வால்பாறைக்கு வரும் மலைப்பாதையில், கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையே, ரோட்டில் வரையாடுகள் அதிக அளவில் உள்ளன. வரையாடுகள் ரோட்டில் உலா வருவதால், சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறையில் பருவமழை தீவிரமாக பெய்கிறது. மழை காலங்களில் மலைப்பாதையில் வரையாடுகள் அதிகம் நடமாடுவதால், சுற்றுலா பயணியர் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும். வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தவோ, வரையாடுகளை செல்பி எடுக்கவோ, துன்புறுத்தவோ கூடாது. மீறினால் வனஉயிரின பாதுகாப்பு சட்டப்படி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, கூறினர்