வறண்ட குளங்கள், ஏமாற்றிய போர்வெல்கள்; மக்கள் புகார் கலெக்டரிடம் மக்கள் புகார்
அன்னுார்; 'குளங்கள் வறண்டு விட்டது, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது,' என, கலெக்டர் அலுவலகத்தில் அல்லப் பாளையம் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அல்லப்பாளையம் ஊராட்சி சார்பில், கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் அளித்த மனு: அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் அன்னுார் ஒன்றியத்தில் பெரும்பாலான ஊராட்சிகளில் குளம், குட்டைகளுக்கு தண்ணீர் விடப்பட்டுள்ளது. ஆனால் அல்லப் பாளையத்தில் உள்ள குளம், குட்டைகளுக்கு சோதனை அடிப்படையில் தண்ணீர் விடப்பட்டது.அதன் பிறகு இதுவரை தண்ணீர் வரவில்லை. 15 ஏக்கர் பரப்பளவு உள்ள அல்லப்பாளையம் பெரிய குட்டையில் தண்ணீர் இல்லை. பத்து ஏக்கர் பரப்பளவு உள்ள மயான குட்டை, 3.5 ஏக்கர் பரப்பளவு உள்ள வண்டி குட்டை என அனைத்தும் வறண்டு போய் உள்ளன. போர்வெல்களில் நீர் மட்டம் குறைந்து விட்டது. இதுகுறித்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஐந்தாவது நீரேற்று நிலைய பொறியாளர்களிடம் கடந்த ஆறு மாதங்களாக பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. விரைவில் அல்லப்பாளையம் ஊராட்சியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் விட வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.