உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பார்வை இல்லாவிட்டாலும்... எப்போதும் தடகளத்தில் ராஜா!

பார்வை இல்லாவிட்டாலும்... எப்போதும் தடகளத்தில் ராஜா!

''இதுவரை மாநில அளவில் ஒரு 15 மெடல் வாங்கியிருப்பேன் சார்,'' என சர்வசாதாரணமாக கூறினார், தடகள வீரர் பிரகதீஸ்வர ராஜா.என்னது... மாநில அளவில், 15 பதக்கமா என, அவர் சொன்னதை கேட்ட நமக்கு பிரமிப்பு ஏற்பட்டது. ஏனென்றால், அவர் ஒரு பார்வைத்திறன் மாற்றுத்திறனாளி. அவர் தனிமுத்திரை பதித்து வரும் துறை தடகளம்.கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த இவரது தந்தை மூர்த்தி ஒரு ஒர்க் ஷாப் தொழிலாளி. தாய் நாகலட்சுமி; இல்லத்தரசி.மாற்றுத்திறனுடன் பிறந்தாலும், சாதிக்க வேண்டும் என்ற நோக்கில், எம்.ஏ., ஆங்கிலத்தில் பட்டம் பெற்றார். அதே வேகத்தில் பி.எட்., படித்தார். இருந்தாலும், ஏதோ ஒரு சாதனையை செய்யத்தான் நாம் பிறவி எடுத்துள்ளோம் என்ற உந்துதல் மட்டும், அவரை விடவில்லை.அவர் கூறியதாவது:பள்ளி பயிலும் போது நடந்த விளையாட்டு, கலைநிகழ்ச்சி போட்டிகளுக்கு எங்கள் சிறப்பு ஆசிரியர்கள் அழைத்து சென்றனர். அவர்கள்தான் எனக்குள் இருந்த திறமையை வெளிக்கொண்டு வந்தனர்.நேரு ஸ்டேடியம் சென்ற போது, அங்கு இதுபோன்ற விளையாட்டுகள் மாற்றுத்திறனாளிகளுக்கும் உள்ளது எனத் தெரிந்தது. அதன் பின்னரே பயிற்சியை துவங்கினேன். 2016 முதல் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.இதோ இப்போது வரை, மாநில அளவில், 100, 200, 400 மீ., ஓட்டங்களில், 15 பதக்கங்கள் வென்றுள்ளேன். தேசிய அளவில், ஐந்து பதக்கங்களை பெற்றுள்ளேன். வரும் மார்ச்சில் டில்லியில் நடக்கும், பாரா ஒலிம்பிக்ஸின் உலக கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளில், பங்கேற்க உள்ளேன்.தேசிய அளவில் உச்சத்தில் இருப்பவர்கள் மட்டுமே பங்கேற்கும், கேலோ இந்தியா போட்டிகள் மார்ச், 20ல் நடக்கிறது. அதிலும், பங்கேற்க உள்ளேன். நான் முற்றிலும் பார்வையற்றோருக்கான போட்டிகளில் பங்கேற்கிறேன்.அதற்கு, என்னுடன் வழிகாட்டியாக ஒருவர் வருகிறார். அவர் தான், குதிரை வண்டியை இயக்கும் சாரதி போன்றவர். இவரும் எனது பெற்றோரும், அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதே என் இலக்கு.இவ்வாறு, அவர் கூறினார்.பார்வைத்திறன் மாற்றுத்திறனாளியான பிரகதீஸ்வர ராஜா, தற்போது தனியார் வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை