அம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் மயான பூஜை
அன்னுார்; அன்னுார், அங்காள பரமேஸ்வரி கோவில் குண்டம் திருவிழாவில் மயான பூஜை நடந்தது.அன்னுார், தென்னம்பாளையம் சாலையில், பல நூறு ஆண்டுகள் பழமையான, அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலில் மகா சிவராத்திரி குண்டம் திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. காலையில் விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, கங்கணம் கட்டுதல் நடந்தது. மாலையில் கொடி ஏற்றப்பட்டது. நேற்றுக்காலை அபிஷேக பூஜையும், தீபாராதனையும், மயான பூஜையும் நடந்தது. கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று (25ம் தேதி) காலை 9:00 மணிக்கு, நந்தி அழைத்தலும், அபிஷேக ஆராதனையும் நடக்கிறது. மாலையில் கோவிலுக்கு அணி கூடை எடுத்து வருதலும், அம்மன் அழைத்தலும் நடக்கிறது.நாளை (26ம் தேதி) காலை திருக்கல்யாண உற்சவமும், மதியம் பூக்கூடை எடுத்து வருதலும் நடக்கிறது. இரவு கும்மியாட்டம் நடக்கிறது. வரும் 27ம் தேதி காலை 6:30 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து, ஜமாப் இசையுடன் மாவிளக்கு ஊர்வலம் நடைபெறுகிறது.