| ADDED : ஆக 04, 2024 05:37 AM
கோவை : ஆண்டுதோறும் நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பைக்காக, விளையாட்டு போட்டிகளில் அரசு ஊழியர்களுக்கான கால்பந்து சேர்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்று விளையாடும் வகையில், பல்வேறு பிரிவுகளில் முதலமைச்சர் கோப்பைக்காக விளையாட்டு போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாயிலாக நடத்தப்படுகின்றன.போட்டி விவரங்களை, இரு தினங்களுக்கு முன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டது. அதில் அரசு ஊழியர்களுக்கான பிரிவில், கபடி, தடகளம், இறகுப்பந்து, வாலிபால், செஸ், கேரம் ஆகிய போட்டிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்பந்து மற்றும் கூடைப்பந்து விளையாட்டுகள் இடம்பெறவில்லை. தமிழகத்தில் கால்பந்து மற்றும் கூடைப்பந்து விளையாட்டுகளில் ஆர்வமும், திறமையும் உள்ள அரசு ஊழியர்கள் பலர் உள்ளனர். முதலமைச்சர் கோப்பை வருவதற்கு முன், அரசு ஊழியர்களுக்காக நடத்தப்பட்டு வந்த விளையாட்டுகள் தற்போது இல்லாததால், அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இதுகுறித்து, அரசு ஊழியர் மற்றும் கால்பந்து வீரர் ஜேம்ஸ் கென்னடி கூறுகையில், ''அரசு ஊழியர்கள் பெரும்பாலானோர் கால்பந்து விளையாட விரும்புகின்றனர். ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை கிடைத்தவர்களும் இல்லை. கடந்த காலங்களில் அரசு ஊழியர்களுக்கான போட்டிகளில், அரசு ஊழியர்கள் அதிக அளவில் கலந்து கொண்டுள்ளனர். சில ஆண்டுகளாகவே கால்பந்து விளையாட்டு சேர்க்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கண்டுகொள்வதில்லை. பெரும்பாலானோர் விரும்பும் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் போட்டி நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏமாற்றம் தான் கிடைக்கிறது,'' என்றார்.