ஐ.டி.ஐ., முடித்த மாணவர்கள் அப்ரன்டீஸ் பயிற்சிக்கு வரலாம் கிரில் தயாரிப்பாளர்கள் வலியுறுத்தல்
கோவை;மாநிலம் முழுவதுமுள்ள ஐ.டி.ஐ., தொழிற்பயிற்சி மையங்களில், பிட்டர், வெல்டர், மற்றும் சீட் மெட்டல் பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவர்கள், கிரில் தயாரிப்பு தொழிலகங்களுக்கு பயிற்சிக்காக அனுப்பப்பட வேண்டும் என, கோவை மாவட்ட கிரில் தயாரிப்பளார்கள் சங்கம் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.பல்வேறு பிரிவுகளின் கீழ், கோவையில் மட்டும் 3,200 ஒர்க் ஷாப்கள் உள்ளன. இதை சார்ந்து, 50 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர்.இத்தொழில்கள், மின்சார கட்டணம், ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்வதாக, கிரில் தயாரிப்பாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.கிரில் தயாரிப்பு தொழிலகங்களில், பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்களே பணிபுரிவதால், அவர்களுக்கான இருப்பிட, உணவு செலவு என தேவையற்ற செலவினங்கள் ஏற்படுவதாகவும், திறன் மிக்க தொழிலாளர்கள் பற்றாக்குறை தொடர்வதாகவும், உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.இதுகுறித்து, கோவை மாவட்ட கிரில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் திருமலை ரவி கூறியதாவது:திறன் மிக்க தொழிலாளர்கள் பற்றாக்குறை, எப்போதும் உள்ளது. இதனை சரிசெய்ய, ஐ.டி.ஐ., தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் மாணவர்களை அப்ரன்டீஸ் பயிற்சிக்காக, கிரில் தொழிலகங்களுக்கு அனுப்பவேண்டும். இதனால், திறன் மிக்க தொழிலாளர்கள் கிடைப்பார்கள்.கோவையில் ஏழு இடங்களை சுட்டிக்காட்டியுள்ளோம் அதில், சிறிய தொழிற்பேட்டை அமைக்க வலியுறுத்தியுள்ளோம். விசைத்தறி தொழில் போன்று, கிரில் தொழில்களுக்கும் குறைந்தபட்சம், 500 யூனிட் மின்சாரம் இலவசமாகவும், அதற்கு மேல் சலுகை கட்டணத்திலும் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.