| ADDED : ஆக 13, 2024 01:37 AM
வால்பாறை;வால்பாறையில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்குப்பருவ மழை சீசன் துவங்கியது. ஜூலை மாத இறுதியில் மழை தீவிரமடைந்ததால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை கடந்த மாதம், 19ம் தேதியும், 120 அடி உயரமுள்ள ஆழியாறு அணை, 28ம் தேதியும் நிரம்பின.இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மழைப்பொழிவு குறைந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் இடியுடன் கனமழை பெய்தது. கனமழையினால் ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 158.74 அடியாக காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு, 1,374 கனஅடி தண்ணீர் வரத்காக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 1,438 கனஅடி வீதம் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடப்படுகிறது. இதனால், பரம்பிக்குளம் அணையின் 72 அடி உயரத்தில், நேற்று காலை, 70.41 அடி நீர்மட்டம் இருந்தது. அதிகபட்சமாக சின்கோனாவில், 42 மி.மீ. மழையளவு பதிவானது.வால்பாறை அடுத்துள்ள, ரொட்டிக்கடை பகுதியில் காளிதாஸ் என்பவரின் வீட்டின் மீது மண் சரிந்து விழுந்ததில், சமையல் அறை சேதமானது. தகவல் அறிந்த நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி நேரில் பார்வையிட்டு, மழை நீர் வீடுகளுக்குள் புகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.