உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பசுமைக்கு திரும்பிய வனம்

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பசுமைக்கு திரும்பிய வனம்

பொள்ளாச்சி:மேற்குத்தொடர்ச்சி மலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழையால், ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதி பசுமைக்கு திரும்பியது.ஆனைமலை புலிகள் காப்பகம், 1,479 ச.கி.மீ,. பரப்பில், பொள்ளாச்சி, மானாம்பள்ளி, வால்பாறை, உலாந்தி, உடுமலை, அமராவதி, கொழுமம் வந்தரவு வனச்சரகங்களை உள்ளடக்கி அமைந்துள்ளது.கோடையின் தாக்கம் அதிகரித்தபோது, இவ்வனப்பகுதியில் மரங்கள், செடிகள் காய்ந்து வறட்சியாக காட்சியளித்தன.தவிர, ஆறுகள், அருவிகள் நீர் வரத்து முற்றிலும் இல்லாததால், தடுப்பணை, கசிவு நீர் குட்டைகள் உள்ளிட்ட நீராதாரமிக்க பகுதிகள் வறண்டன. இதனால், உணவு மற்றும் தண்ணீரைத்தேடி வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வந்தன.இதனை தடுக்கும் வகையில், வனத்துறையால் டிராக்டர் வாயிலாக, நீர்நிலைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வந்தது.அதேநேரம், தற்போது, மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பல நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஆறுகள் மற்றும் அருவிகளில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது.நீராதாரமிக்க பகுதிகள், தண்ணீரால் நிறைந்து வரும் நிலையில் வனவிலங்குகள் 'குஷி'யுடன் உலா வருகின்றன. அதேநேரம், வனத்தில் உள்ள மரங்கள் மற்றும் செடிகள், செழுமையடைந்து பசுமையாக காட்சியளிக்கிறது.வனத்துறையினர் கூறுகையில், 'மழையின் தாக்கம் அதிகரிப்பதால், வனங்கள் செழுமையாக மாறி வருகின்றன. வால்பாறைக்கு செல்லும் சுற்றுலாப்பயணியர் பலரும், இயற்கையின் அழகை கண்டு ரசிக்கின்றனர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ