பா.ரஞ்சித்தின் 'தங்கலான்' படத்தின் 'மினுக்கி... மினுக்கி...' பாடல், ட்ரைலர், பின்னணி இசை என, படத்தின் ஒவ்வொரு அம்சமும் ஆவலை துாண்டி வருகிறது. எல்லாவற்றையும் விட விக்ரம், எதிர்பார்ப்பை கிளறி விட்டுள்ளார். ட்ரைலரிலும், போஸ்டரிலும் மிரட்டுகிறது அவரது லுக்! வரும் 15ம் தேதி, திரையரங்குக்கு வருகிறது தங்கலான்.கோவையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகர் விக்ரம், நடிகையர் பார்வதி, மாளவிகா மோகன் ஆகியோர் பங்கேற்றனர்.மகிழ்ச்சியுடன் பேசத் துவங்கினார் விக்ரம்...!தங்கலான் திரைப்படத்தில் நடித்தவர்கள் மட்டுல்ல, தொழில்நுட்பக் கலைஞர்களும் நிறைய உழைத்துள்ளனர். இந்த படத்தில் ஏதோ ஒரு மந்திரம் இருக்கிறது. ஒவ்வொரு காட்சியை பார்க்கும் போதும், அடுத்த காட்சிக்கான எதிர்பார்ப்பு இருக்கும். பார்வதியை தவிர, அந்த கதாபாத்திரத்தில் யாரும் நடிக்க முடியாது என்ற அளவுக்கு நடித்திருக்கிறார். மாளவிகா மோகனுக்கு, இந்த படம் சிறந்த பெயரை கொடுக்கும். இயக்குனர் பா.இரஞ்சித், கதையை தேர்ந்தெடுத்த விதம், இன்னும் வியப்புக்குரியதாக உள்ளது. ஜி.வி.பிரகாஷின் இசை, படத்துக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது,'' என்றார்.மாளவிகா மோகன் பேசுகையில், ''விக்ரம், பார்வதி உடன் நடித்தது, நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. இயக்குனர், வித்தியாசமான கதை களத்தை கொடுத்துள்ளார்,'' என்றார்.பார்வதி கூறுகையில், ''படத்தில் நடித்த நான் உட்பட எல்லோரும், மிகவும் கஷ்டப்பட்டு நடித்தோம். அந்தளவுக்கான கதை இது. ரசிகர்களுக்கு நிச்சயமாக பிடிக்கும்,'' என்றார்.இந்த படம் ஆஸ்காருக்கு செல்லுமா? என்ற கேள்விக்கு, தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த தனஞ்செயன் கூறுகையில், ''அதற்கான முயற்சியில்தான் இருக்கிறோம். வரும் சில மாதங்களில் ஷார்ட்லிஸ்ட் செய்வார்கள். அதில் கண்டிப்பாக தங்கலான் இடம்பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது,'' என்றார்.